சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள அரளிப்பாறையில் மாசிமகத்தை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடத்துவது பாரம்பரியமாக இருந்து வருகிறது.
இந்த வருடத்திற்கான மஞ்சுவிரட்டு நேற்று நடைபெற்றது. அரளிப்பாறை மலை மீதுள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, சேவுகமூர்த்தி அய்யனார் கோயில் காளைகளுக்கு மரியாதை செய்து வேட்டி, துண்டுகள் வழங்கப்பட்டன. பிறகு தொழுவத்திலிருந்து கோவில் காளைகள் முதலில் அவிழ்த்து விடப்பட்டதும் மற்ற காளைகள் தொடர்ந்து அவிழ்க்கப்பட்டன.
125 மாடுகள் மட்டும் பதிவு செய்யப்பட்டிருந்ததால், அவை
ஜல்லிக்கட்டு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன.
இதனிடையே ஆங்காங்கே வயல்வெளிகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டு மாடுகளும் (தொழுவத்தில் அடைக்கப்படாத மாடுகள்) அவிழ்த்து விடப்பட்டன.
சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காளைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.
பார்வையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை விழாக் கமிட்டியினர் செய்யவில்லை என்று கூறப்படும் நிலையில், மாடுகள் சீறிப்பாய்ந்து முட்டியதில், பார்வையாளராக வந்திருந்த கீழையூரை சேர்ந்த சுந்தரம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மொத்தம் 81 பேர் காயமடைந்த நிலையில், 16 பேர் படுகாயங்களுடன் புதுக்கோட்டை, திருப்பத்தூர், சிங்கம்புணரி மற்றும் சிவகங்கை மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த மஞ்சுவிரட்டை சுமார் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மலைக்குன்றின் மீது அமர்ந்தபடியும், சுற்றி நின்றவாறும் ஆரவாரத்துடன் கண்டு களித்தனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.