உக்ரைன் மீது ரஷ்யா உக்கிரமான தாக்குதலை நடத்திவருகிறது. குண்டு மழை பொழிவதால், உக்ரைன் நாட்டின் பல பகுதிகள் கடுமையாகச் சேதமடைந்திருக்கின்றன. உயிர் பிழைப்பதற்காக அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கியும், பதுங்கு குழிகளிலும் தஞ்சம் அடைகிறார்கள். அதே சமயம், உக்ரைனில் தங்கிப் படிக்கும் இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கைகளும் வெளியுறவுத்துறை மூலம் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு கொத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்ற மாணவரும் உக்ரைன் நாட்டில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கித் தவிக்கிறார். உக்ரைனின் முஜைல் நகரிலிருக்கும் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அவர் இறுதியாண்டு படித்துவருகிறார்.
சக்திவேலின் நிலைமையைக் கண்டு அவரின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள். அவரின் தாய் சசிகலா ஏற்கெனவே சர்க்கரை நோய், ரத்தம் அழுத்தம் போன்ற பாதிப்புடையவர். மகன் நாடு திரும்புவாரா என்ற நினைப்பிலேயே கதறி அழுது கொண்டிருந்த சசிகலாவின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் அவரின் உடல்நிலை மிகவும் மோசமானது. உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஆனால், வழியிலேயே சசிகலா மரணமடைந்துவிட்டார். தாயின் இறுதிச் சடங்கில்கூட கலந்து கொள்ள முடியாத துக்கத்தில் உக்ரைனிலிருந்தபடியே வீடியோ காலில் கதறி அழுதார் சக்திவேல். தாயின் இறுதிச் சடங்கை வீடியோ காலிலேயே முழுவதுமாக பார்த்து கதறிய சக்திவேலின் நிலையைக் கண்டு உறவினர்களும் தாங்க முடியாத துயரத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.
– ராயல் ஹமீது.