கோவை மாவட்டம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவையை திமுக க்ளீன் ஸ்வைப் செய்து மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.
இதனால் திமுகவின் மேல்மட்ட நிர்வாகிகள் ஏக குஷியில் இருக்கின்றனர். கிழக்கே உதிக்கும் சூரியனை உன்னை மேற்கே உதிக்க ஆணையிட்டோம் என்று சிட்டிசன் படத்தில் வரும் அஜித் பாடலைத்தான், திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி நிஜத்தில் நிகழ்த்திக்காட்டி இருக்கிறார்.
ஆம் உதய சூரியன் உதிக்கவே உதிக்காது என்று கருதப்பட்ட மேற்கு மண்டலத்தில் திமுக இந்த கிளீன் வெற்றியை பதிவு செய்துள்ளது.
அதிலும் கோவையில் திமுக ஒரு எம்எல்ஏ கூட இல்லாமல் அதிமுகவை வீழ்த்தி மொத்த மாநகராட்சியையும் கைப்பற்றி உள்ளது.
கோவையில் திமுகவின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றால்.. கண்ணை மூடிக்கொண்டு அது செந்தில் பாலாஜி என்று சொல்லிவிடலாம். வெளியூர் ஆட்கள் இருக்காங்க.. வெளியே அனுப்புங்க என்று எஸ்பி வேலுமணி ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா செய்தாரே.. அந்த வெளியூர் ஆளே கரூரை சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜிதான். ஆம்,கோவையில் ஒரு மாதம் டென்ட் அடித்து.. இவர் செய்த அரசியல் வியூகங்கள்தான் திமுக கோவையை கைப்பற்ற காரணம்.
தலைமை கொடுத்த கிரீன் சிக்னல் காரணமாக மொத்தமாக ரத கத துரக பதாதைகளையும் அப்படியே களத்திற்கு கொண்டு வந்து கோவை வெற்றியை செந்தில் பாலாஜி ஆக்கி இருக்கிறார். கோவையை செந்தில் பாலாஜி வென்று கொடுத்துவிட்டால், அவருக்கு பெரிய பதவிகள் வரலாம் என்பதால் திமுகவிலேயே அவருக்கு எதிராக சிலர் பார்த்த உள் வேலைகளை எல்லாம் செந்தில் பாலாஜி முறியடித்து கோவையை சுருட்டி தனது பாக்கெட்டிற்குள் போட்டு இருக்கிறார்.
எஸ்பி வேலுமணி போன்ற வலுவான தலைவர்களை வைத்துக்கொண்டு கோவையில் அதிமுக இப்படி ஒரு தோல்வியை சந்தித்து இருக்கிறது. முன்னதாக கோவையில் ஒருவேளை திமுக வெற்றிபெற்றால் செந்தில் பாலாஜிக்கு கண்டிப்பாக பெரிய பதவி கிடைக்கும் என்று முன்பே ஒன் இந்தியா செய்தியில் குறிப்பிட்டு இருந்தோம்.
அதன்படியே நேற்று கோவை வெற்றிக்கு பின் செந்தில் பாலாஜிக்கு திமுகவின் மூத்த நிர்வாகிகள் பலர் கால் செய்து வாழ்த்து தெரிவித்து உள்ளனர். கோவை நிர்வாகிகள் சிலரும் கசப்பை மறந்து செந்தில் பாலாஜிக்கு போன் செய்து பாராட்டி உள்ளனர். திமுகவின் டாப் நிர்வாகிகள் செந்தில் பாலாஜியின் இந்த ரிசால்ட்டால் உற்சாகத்தில் உள்ளனர். முதல்வர் ஸ்டாலினும் நேற்று செந்தில் பாலாஜியை தனியாக போனில் அழைத்து வாழ்த்தி இருக்கிறார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
V. ஹரிகிருஷ்ணன்.
பொள்ளாச்சி.