சிங்கம்புணரியில் தொழிலாளர்களைப் பழிவாங்கும் ஆலை நிர்வாகம்! சி.ஐ.டி.யு கண்டன ஆர்ப்பாட்டம்!

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் 1971ஆம் ஆண்டு துவக்கப்பட்டது, மெட்ராஸ் மோட்டார்ஸ் போர்ஜிங் லிமிடெட் ஆலை. இந்த ஆலையில் துவக்கத்தில் இரு சக்கர வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட்டன. தற்போது கனரக வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கப்படுகின்றன. சுமார் 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்போது பணி புரிந்து வருகின்றனர்.

துவக்கப்பட்டு 50 ஆண்டுகளாகிவிட்ட நிலையிலும், இந்த நிறுவனத்தில் நிரந்தரத் தொழிலாளர்கள் குறைவாகவே உள்ளனர். பணியில் சேர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலான நிலையிலும், ஏராளமான தொழிலாளர்கள் தற்போது வரை தற்காலிகப் பணியாளர்களாகவே வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

1982ல் இந்த ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ‘லேபர் யூனியன்’ எனும் தொழிற்சங்கம் அமைக்கப்பட்டது. காலப்போக்கில் அந்தத் தொழிற்சங்கம் நீர்த்துப்போகச் செய்யப்பட்டதாக தொழிலாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
அதன்பின்பு வலுவான தொழிற்சங்கம் ஏதும் அமைக்கப்படாமல், ஆலை நிர்வாகத்திற்கு சாதகமான நபர்கள் தொழிற்சங்கம் என்ற பெயரில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஆலையில் பணிபுரிந்து வரும் தற்காலிகத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி கடந்த வருடம் ஐ.என்.டி.யூ.சி தொழிற்சங்கம் அமைக்கப்பட்டது.
அதைப் பொறுக்காத ஆலை நிர்வாகம், இதுவரையில் இல்லாத நடைமுறையாக அதற்கு முக்கிய காரணமான 7 நபர்களை சென்னைக்கு கட்டாய பணியிட மாற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது.

எனவே, தொழிலாளர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வலுவான தொழிற்சங்கம் என கருதப்படும் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தை உருவாக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

அந்தத் தொழிற்சங்கத்தையும் ஆலை நிர்வாகம் தடுக்க முனைந்ததாகக் கூறப்படும் நிலையில், நேற்று முன்தினம் சிங்கம்புணரி பேருந்து நிலையம் முன்பாக சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் சார்பில், 7 தொழிலாளர்களின் கட்டாய பணி இடமாற்றத்தை கண்டித்தும், தற்காலிக தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள் தங்களது மனைவி, குழந்தைகளுடன் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்ட தொழிலாளர்கள், தொழிற்சாலையின் பழிவாங்கும் செயலை கண்டித்து கண்டன முழக்கமிட்டனர்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிவகங்கை மாவட்ட சி.ஐ.டி.யு தலைவர் வீரையா தலைமை தாங்கினார்.
சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் சேதுராமன், அழகர்சாமி சி.ஐ.டி.யு மாவட்ட துணைச் செயலாளர், வேணுகோபால் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைத்தலைவர், ஆறுமுகம் மாவட்ட விவசாய சங்க செயலாளர், சிங்காரம் அரசு போக்குவரத்து ஓய்வுபெற்றோர் நல அமைப்பு தலைவர், சாந்தி ஜனநாயக மாதர் சங்க தலைவர், முருகேசன் கட்டுமான தொழிலாளர் சங்கம், வேங்கையா சி.ஐ.டி.யு பொது தொழிலாளர் சங்கம் மற்றும் அய்யப்பாண்டி சி.ஐ.டி.யு சுமைப்பணி தொழிலாளர் சங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

– பாரூக், ராயல் ஹமீது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp