சீரமைப்பு பணியில் வேகம் காட்டாததால் கோவை ரெயில் நிலைய சாலை வாகன ஓட்டிகளை வதைத்து வருகிறது. எனவே விரைவில் பணிகளை முடிக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.
கோவை மாநகர பகுதியில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தை செயல்யபடுத்த குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் கோவை ரெயில் நிலைய சாலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்தது.
இதற்காக சாலையின் ஒரு பகுதியில் தோண்டப்பட்டு அங்கு குழாய்கள் பதிக்கப்பட்டன. இதனால் அந்த சாலை ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டது. பின்னர் பணிகள் முடிந்ததால் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
ஆனால் இந்த சாலையில் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பகுதி சரியாக மூடப்படாததால் பள்ளம்போன்று காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி பள்ளம் போன்று உள்ள பகுதியில் சிக்கி விபத்துக்குள்ளாகி வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சாலையை சீரமைக்கும் பணி தொடங்கப்பட் டது. ஆனால் அந்த பணிஆமை வேகத்தில் நடக்கிறது. இதன் காரணமாக இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள்.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
குழாய் பதிக்க தோண்டப்பட்ட இந்த சாலையை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதன் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் இருந்து லங்கா கார்னர் வரை இருசக்கர மற்றும் இலகுரக வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த சாலையில்தான் ஸ்டேட் வங்கி, பத்திரப்பதிவு அலுவலகம், மத்திய கூட்டுறவு வங்கி, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், பி.எஸ்.என்.எல். அலுவலகம், தீயணைப்புத்துறை அலுவலகம் என பல்வேறு முக்கிய அலுவலகங்கள் உள்ளன.
ரெயில் நிலையத்திற்கும், வங்கி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். தற் போது கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தீயணைப்பு நிலையம் அருகே வரை சீரமைக்கப்பட்டு உள்ளது.
மற்ற பகுதிகள் சீரமைக்கவில்லை. எனவே சீரமைப்பு பணியில் வேகம் காட்டி வாகன ஓட்டிகளை வதைத்து வரும் இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.