மேலூர் சட்டமன்ற தொகுதியானது அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வந்தது. ஆனால், கடந்த 2001க்குப் பிறகு அதிமுகவின் வசமாகிப் போனது. அதன்பிறகு நடைபெற்ற 5 சட்டமன்ற தேர்தல்களிலும் தொகுதியை அதிமுகவே கைப்பற்றியுள்ளது. அதில் முதல் மூன்று முறை மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமியும், அதன் பிறகு இரண்டு முறை தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான் (எ) செல்வமும் வெற்றி பெற்றுள்ளனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமி, தனது இறுதிநாள் வரை அமமுகவிற்கான அடித்தளமாக இருந்தார். அவர் மறைந்ததும் அமமுகவின் நிலை, கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிப் போனது. தற்போது நடைபெற உள்ள மேலூர் நகராட்சித் தேர்தலில் அனைத்து வார்டுகளுக்கும் வேட்பாளர் நிறுத்த முடியாமல், ஒற்றை இலக்க எண்ணிக்கையிலான வார்டுகளுக்கு மட்டுமே வேட்பாளர்களை நிறுத்தும் நிலைக்கு அமமுக தள்ளப்பட்டுள்ளது.
மேலூர் நகராட்சியானது 27 மன்ற உறுப்பினர்களைக் கொண்டது. இத்தேர்தலில் திமுக அணியில் திமுக 26 வார்டுகளுக்கும், காங்கிரஸ் கட்சி 1 வார்டுக்கும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. ஆனால், அதிமுக 27 வார்டுகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நகராட்சியானது 30,000 வாக்களர்களைக் கொண்டது. இதில், இசுலாமியர்கள் பெரும்பான்மையாக
உள்ளனர்.
இந்நிலையில், களப்பணிகளில் அதிமுகவே முந்தி நிற்கின்றது. அதிமுகவிற்கு மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளானும், முன்னாள் மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் தமிழரசனும் மிகப் பெரும் பலமாக உள்ளனர். கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூட, ஒன்றியக் குழு உறுப்பினர்களில் திமுக பெரும்பான்மை பெற்றிருந்தபோதும், அதிமுகவைச் சேர்ந்த பொன்னுச்சாமி என்பவரே ஒன்றியக்குழுத் தலைவராக வெற்றிபெற்றார். இவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசனின் உடன்பிறந்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவில் நகர்மன்ற தலைவர் வேட்பாளர் பந்தயத்தில், முன்னாள் நகர்மன்ற தலைவர் சாகுல் ஹமீது, நகரச் செயலாளர் பாஸ்கரன், சூரக்குண்டு பாலக்கிருஷ்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசனின் மகன் திவாகர் ஆகியோர் உள்ளனர். இருப்பினும் இவர்களின் பணிகள் அனல் பறக்க உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஒரே ஒரு வேட்பாளர், தனது வெற்றியை முன்பே உறுதி செய்துவிட்ட நிலையில், திமுக தனது தேர்தல் வேலைகளில் சுனக்கம் காட்டுவதாகவே மக்கள் கூறுகின்றனர். தேர்தல் பணிகளில் ஈடுபடும் கட்சிக்காரர்கள் கூட திமுகவின் தேர்தல் செலவைப் பார்த்து, சோர்வடைந்துள்ளதாகக் கூறுகின்றனர். திமுகவின் நகர்மன்ற தலைவர் வேட்பாளர் பந்தயத்தில் அக்கட்சியின் நகர் செயலாளர் முகமது யாசின் முந்தி நின்றாலும், முன்னாள் நகர்மன்ற உறுப்பினரும், திமுக மூத்த முன்னோடிகளில் ஒருவருமான கரு.தியாகராசனின் தம்பி பேரன் 22 வயதான ரிஷி என்பவரும் பேசப்படும் இடத்திற்கு வந்துள்ளார்.
அனைத்துக் கட்சிகளின் தேர்தல் வேலைகளையும், மக்களின் உள்ளங்களையும் அறிந்துகொள்ள வேண்டி நகர் முழுதும் சுற்றி வந்ததில் இன்றைய நிலையில், அமமுகவிற்கு 1 அல்லது 2 உறுப்பினர்களும், ஆளும் திமுகவிற்கு 8-12 வரையிலான உறுப்பினர்களும், அதிமுகவிற்கு 13-15 வரையிலான உறுப்பினர்களும் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுவது தெரியவந்தது.
– பாரூக்.