திமுகவினருக்கு திமுகவில் மதிப்பு இல்லை! கொந்தளிக்கும் கோவை திமுகவினர்! சமாளிப்பாரா செந்தில் பாலாஜி?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் கோவை மாவட்ட வேட்பாளர் பட்டியல் திமுகவினரிடையே அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.

தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ஒட்டுமொத்த கோவையையும் கைப்பற்ற புதிய அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தாலும், கோவையை பொறுத்தவரை அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. இதனை கருத்தில் கொண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்து இடங்களையும் கைப்பற்றி ஒட்டுமொத்த கோவை மாவட்டத்தையும் திமுகவின் கோட்டையாக மாற்ற வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவை மாவட்ட பொறுப்பாளராக நியமித்தது திமுக தலைமை.

இதனை தொடர்ந்து கோவை மாவட்டத்தின் பட்டி தொட்டியெங்கும் சுற்றுபயணத்தை ஆரம்பித்த அமைச்சர் செந்தில் பாலாஜி மாவட்ட செயலாளர் முதல் அடிமட்ட உறுப்பினர் வரை அனைவரும் கௌரவப்படுத்தி கட்சி தொண்டர்களுக்கு புது உற்சாகத்தை அளித்துள்ளார். பொதுமக்களிடையே நல்ல கவனத்தை பெற்றாலும், திமுகவினரின் கவனத்தை பெறவில்லை என்கிறார்கள் கோவை மாவட்ட உடன்பிறப்புகள்.

யார் யார் கட்சிக்கு உழைத்தார்களோ அவர்களுக்கு போட்டியிட ‘சீட்’ கொடுக்காமல், வாரிசுகளுக்கும், பெரும் பணக்காரர்களுக்கும் கொடுத்து அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறார்கள் செந்தில் பாலாஜி & கோவினர். அதிருப்தியால் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள் திமுகவினர். அதுமட்டுமின்றி மேலிடத்துக்கு பெரிய புகார் பட்டியலையும் வாசித்து இருக்கிறார்கள்.

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் திமுக – காங்கிரஸ் கூட்டணி கட்சிகளிடையே ஏற்பட்ட உடன்பாட்டில் 9 இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் இதில் மாநகராட்சிக்கு உட்பட்ட சுண்டாக்காமுத்தூர் 89வது வார்டு, பகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கிவிட்டனர். இதனால் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கடந்தமுறை குனியமுத்தூர் நகராட்சி ஆக இருந்தபோது நகராட்சித் தேர்தலில் திமுக காங்கிரஸ் இணைந்து போட்டியிட்ட நிலையில் திமுக 8 வார்டுகளும் காங்கிரஸ் 4 வார்டுகளும், அதிமுக 9 வார்டுகளும் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் திமுகவுடன் கூட்டணி சேர்ந்து வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் முருகேசன் அதிமுகவினரின் ஆசை வார்த்தைக்கு இணங்கி திமுக கூட்டணியிலிருந்து விலகி அதிமுகவுடன் சேர்ந்துகொண்டு நகராட்சித் தலைவர் பதவியை பெற்றுக் கொண்டார். மேலும் அப்போது அமைச்சராக இருந்த அமைச்சர் வேலுமணி மிகவும் நெருக்கமானவராக இன்றுவரை இருந்து வருகிறார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் திமுகவில் காலம்காலமாக இருந்து பணியாற்றி வரும் ஏ சுப்பிரமணி என்ற ஸ்பார்க் மணி, கௌரிசங்கர், ஜெயந்தி சக்திவேல் ஆகியோர் விருப்ப மனு கொடுத்துள்ளோம். இந்த மூவரில் யாரேனும் ஒருவருக்கு சீட்டு ஒதுக்கப்பட வேண்டும். அதல்லாமல் வேறு ஒருவருக்கு ஒதுக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, திமுக கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும், நேரடியாக போட்டியிடாமல் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக திமுகவினர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து இன்று சுங்கம்-உக்கடம் புறவழிச்சாலையில் அப்பகுதி மகளிர் திமுகவினர் உட்பட திமுகவினர் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

மேலும், 46 வது வார்டு திமுக வேட்பாளராகிய மீனா லோகநாதன் தொடர்ந்து ஐந்தாவது முறையாக அவரும் அவர் குடும்பத்தினரும் திமுக வேட்பாளராக போட்டியிடுவதை கண்டித்து திமுகவை சேர்ந்த பலர் அதிமுக வேட்பாளர் தளபதி செந்தில் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். மொத்தத்தில் கோவை மாவட்ட திமுக வேட்பாளர் பட்டியல், உடன்பிறப்புக்களிடையே கடும் கோபத்தை உண்டாக்கி இருக்கிறது. இதனை கோவை மாவட்ட தேர்தல் பொறுப்பாளரான செந்தில் பாலாஜி எப்படி சமாளிப்பார் ? இதனை எல்லாம் முறியடித்து கோவையை அதிமுகவிடம் இருந்து கைப்பற்றுவாரா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.

-ஹனீப், கோவை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp