நாளை மறுநாள், புதன்கிழமை அன்று (16/02/2022) புகழ்பெற்ற அரளிப்பாறை மஞ்சுவிரட்டு நடைபெற உள்ளது. பதிவு செய்யப்பட்ட காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மட்டுமே மஞ்சுவிரட்டில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட உள்ள நிலையில், காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான பதிவு சிங்கம்புணரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
ஆனால், பதிவு செய்து கொண்டுள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதாகத் தெரிகிறது. எனவே, கலந்து கொள்ள விருப்பமுள்ள, காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் விரைந்து வந்து பதிவு செய்து கொள்ளுமாறு அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்களுக்கான கொரோனா பரிசோதனையும் சிங்கம்புணரி வட்டாட்சியர் அலுவலகத்திலேயே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, மஞ்சுவிரட்டு ஏற்பாடுகள் சம்பந்தமாக சிங்கம்புணரி வட்டாட்சியர் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்பு கோட்டாட்சியர் முன்னிலையில் அரசு அலுவலர்கள் மற்றும் மஞ்சுவிரட்டுக்கு பொறுப்பான கிராமங்களின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில், ‘ காளைகள் தொழுவத்திலிருந்து மட்டுமே அவிழ்க்கப்பட வேண்டும். கடந்த ஆண்டு அரளிப்பாறை மஞ்சுவிரட்டில் 4 பேர் உயிரிழந்ததற்கு, தொழுவிற்கு வெளியே கட்டுமாடுகள் அவிழ்க்கப்பட்டதே காரணம் எனவும், எனவே இந்த ஆண்டு கட்டுமாடுகள் அனுமதிக்கப்படமாட்டாது, அவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டும்’ என கோட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் கிராமத்தினரிடம் அறிவுறுத்தினர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.