கோவை, பிப்.15-கோவையில், ‘பறக்கும் படை’ என்ற பெயரில் பெயரளவுக்கு ஊருக்குள் சுற்றி வரும் அதிகாரிகளால், பயன் எதுவும் இல்லை என்பது, உள்ளாட்சி தேர்தலில் நிரூபணம் ஆகியுள்ளது.
இனி வரும் நாட்களிலாவது, அவர்கள், தங்களது அதிகாரத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் துரிதமாக செயல்பட வேண்டும் என்பது, நேர்மையான வாக்காளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.ஒவ்வொரு தேர்தலின்போதும், போலீஸ் மற்றும் அரசுத்துறை அலுவலர்களை கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்படுவது வழக்கம். இந்த பறக்கும் படையினருக்கு, ஜி.பி.எஸ்., பொருத்திய பிரத்யேக வாகனங்கள் வழங்கப்படும். பிரசாரம் நடக்கும் பகுதிகளில் சென்று கண்காணிப்பது, பணம், பரிசுப்பொருட்கள் வினியோகித்தால், தடுத்து பறிமுதல் செய்வது இவர்களது பணி.உள்ளாட்சி தேர்தலுக்கு, கோவை மாவட்டத்தில், 72 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குழுவுக்கு, வெவ்வேறு அரசு துறைகளில் இருந்து தலைமை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் இருவர், கேமராமேன் ஒருவரும் குழுவில் இருக்கின்றனர்.இப்படி பணியில் நியமிக்கப்பட்ட பறக்கும் படையினர், இதுவரை உருப்படியாக எந்த அரசியல் கட்சியினரிடம் இருந்தும் பரிசுப்பொருளையும் பிடிக்கவில்லை. பிடித்தவை எல்லாம், பொதுமக்கள், வியாபாரிகளின் பணம்.கோவையில் வீட்டுக்கு வீடு ஆளும்கட்சியினர் ஹாட்பாக்ஸ் வினியோகித்து வரும் நிலையில், பறக்கும் படையினர் செயல்பாடு முற்றிலும் சந்தேகத்துக்கு உரியதாக மாறியுள்ளது.
பொதுமக்களே பிடித்து ஒப்படைக்கும் பரிசுப்பொருட்களும் என்னாகிறது, தேர்தல் ஆணைய கணக்கில் வருமா என்ற சந்தேகத்தையும், பறக்கும் படையினரின் செயல்பாடுகள் ஏற்படுத்தியுள்ளன.ஓட்டுப்பதிவுக்கு இன்னும் நான்கு நாட்களே இருக்கின்றன. வாக்காளர் களை கவர்ந்திழுக்க, சாமம், தானம், பேதம், தண்டம் என எல்லா வழிமுறைகளையும் அரசியல் கட்சியினர் பின்பற்றும் வேளை வந்து விட்டது.
இனி வரும் நாட்களிலாவது பறக்கும் படையினர் வெளிப்படையாக தங்கள் செயல் திறனை காண்பிக்க வேண்டும்.தங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட்டு, ஓட்டுக்கு பணம், பரிசுப் பொருள் தருபவர்களை பிடித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நேர்மையான வாக்காளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
மாவட்ட தலைமை நிருபர்,
-ராஜேந்திரன்