சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் நடைபெற்ற மஞ்சுவிரட்டை சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கண்டு ரசித்துவிட்டு அவரவர் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
மருதி பட்டி அருகே உள்ள கிராமமான எம்.கோவில்பட்டியைச் சேர்ந்த மாடுபிடி வீரரான மகேந்திரன் மகன் பெரியசாமி (வயது27) தனது இருசக்கர வாகனத்தில் வேகமாக ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அதேநேரத்தில், எதிர்திசையில் முறையூர் கிராமத்தை சேர்ந்த ஸ்தபதி அறிவுக்கரசு (59) என்பவர் எம்.கோவில்பட்டியிலிருந்து முறையூரை நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். எதிர்பாராதவிதமாக இருவரது வாகனங்களும் எம்.கோவில்பட்டி அருகே உள்ள பெட்ரோல் நிலையம் முன்பாக நேருக்குநேர் பயங்கரமாக மோதின. மோதிய வேகத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர்.
இருவரும் தலைக்கவசம் அணியாததால் 2 பேருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் அறிவுக்கரசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த பெரியசாமி 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து எஸ்.வி.மங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரளிப்பாறை மஞ்சுவிரட்டு நடந்து முடிந்த சில மணி நேரங்களிலேயே நடந்த இந்தக் கோர விபத்து, அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தையும், பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
– அப்துல்சலாம், திருப்பத்தூர்.