ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒத்த ஓட்டு பாஜக என கலாய்த்து தள்ளிய நிலையில் இந்த முறையும் பாஜக வேட்பாளர் ஒருவருக்கு ஒரே ஒரு ஓட்டு விழுந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. ஆனால் கோவையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் தமிழகத்தில் பாஜகவை கதிகலங்கச் செய்துவிட்டது.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்குள்பட்டது குருடம்பாளையம் ஊராட்சி. இங்கு 9ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த வார்டில் மொத்தமாக 1,551 வாக்குகள் உள்ள நிலையில் தேர்தலில் 913 வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. இதில் திமுகவை சேர்ந்த அருள்ராஜ் 387 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். சுயேச்சையாக போட்டியிட்ட ஜெயராஜ் 240 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.
அது போல் அதிமுகவை சேர்ந்த வைத்தியலிங்கம் 196 வாக்குகள் பெற்று 3ஆவது இடத்தை பிடித்துவிட்டார். வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட பாஜகவை சேர்ந்த கார்த்திக்கு பெரும் சோகம் காத்திருந்தது. அவரது குடும்பத்தில் 5 வாக்காளர்கள் இருந்த நிலையில் அவருக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்தது.
ஏற்கெனவே தமிழகத்தில் பாஜக நோட்டாவை வெல்ல முடியாது என விமர்சனங்கள் இருந்து வந்த நிலையில் ஒத்த ஓட்டு பாஜக என எதிர்க்கட்சியினர் கிண்டல் செய்தனர். கிரிக்கெட் விளையாட்டு நடைபெற்ற விளையாட்டு மைதானங்களில் ஒத்த ஓட்டு பாஜக என கிண்டல் செய்யப்பட்டது. டிவிட்டரில் டிரென்டானது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதாவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அவற்ரில் உள்ள 12,838 வார்டுகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.
இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பவானிசாகர் பேரூராட்சியில் 11-வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நரேந்திரனுக்கு ஒரே ஒரு ஓட்டு கிடைத்துள்ளது. அந்த ஓட்டும் அவருடையதாம். நரேந்திரனுக்கு அவரது குடும்பத்தினரோ நண்பர்களோ வாக்களிக்காததால் அவர் ஏமாற்றமடைந்துள்ளார்.
– பாரூக்.