மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு முதியவர், நேற்று காலை சிங்கம்புணரி – திண்டுக்கல் நெடுஞ்சாலையில் கிருங்காக்கோட்டை பிரிவு அருகே சுற்றித்திரிந்திருக்கிறார். சிங்கம்புணரி காவல் நிலைய தலைமைக் காவலர் மாதவன் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவரால் தன்னைப் பற்றிய விவரங்களை முழுமையாகச் சொல்ல இயலாத நிலையில் இருந்திருக்கிறார்.
முதியவர் தெரிவித்த சில விசயங்களை வைத்து மட்டும் தலைமைக் காவலர் மாதவன், அவரைப் பற்றிய விவரங்களை அறிய தீவிர விசாரணையில் இறங்கினார். அப்போது, அவரது பெயர் சுப்பையா தேவர்(வயது79) என்பதும், திருநெல்வேலியை பூர்வீகமாகக் கொண்ட அவர், கடந்த 20.12.2021 அன்று மேல்மருவத்தூரில் காணாமல் போனவர் என்பதும், அது குறித்து மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. உடனடியாக, மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் அவரது உறவினர்களின் விபரங்கள் பெறப்பட்டு, அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
நேற்று மாலை சிங்கம்புணரி காவல் நிலையத்திற்கு வந்த சுப்பையா தேவரின் உறவினர்களிடம் விசாரணை செய்ததில், சுப்பையா தேவர், கும்பத்தாருடன் மும்பையில் வசித்து வந்ததும், கடந்த டிசம்பர் மாதத்தில் ஆன்மீக சுற்றுலாவாக மேல்மருவத்தூர் கோவிலுக்கு வந்த நிலையில், அங்கு அவர் குடும்பத்தாரிடமிருந்து காணாமல் போனதும் தெரிய வந்தது.
அங்கு அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், காவல் துறையில் புகார் அளித்து விட்டு மும்பை திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், சிங்கம்புணரி காவல்துறையினரின் சீரிய முயற்சியால் முதியவர் சுப்பையா தேவா், நேற்று மாலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதில் பெரு முயற்சி எடுத்த சிங்கம்புணரி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் குகன் மற்றும் தலைமை காவலர் மாதவன் இருவரையும், முதியவரின் உறவினர்களும், சமூக ஆர்வலர்களும் வெகுவாகப் பாராட்டினர்.
– பாரூக், ராயல் ஹமீது.