சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மது போதையில் பயணியை தாக்கியதோடு, ரயில்வே போலீசாரை ஆபாசமாக பேசிய காவலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை பெரியமேடு குற்றப்பிரிவு காவலரான சபரி குமார், நேற்று இரவு சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மதுபோதையில் சென்றுள்ளார். அங்கிருந்த ஜாவித் என்பவரிடம் யார் நீ என்று விசாரணை செய்துள்ளார். அதற்கு அந்தப்பயணி, தான் டெல்லிக்கு செல்லவுள்ளதாக ரயில்வே டிக்கெட்டை காண்பித்துள்ளார்.
அதற்கு காவலர் சபரி குமார் பிளாட்பார்ம் டிக்கெட் எங்கே என்று கேட்டுள்ளார். தான் டெல்லி செல்வதற்கு பயணச்சீட்டு வைத்துள்ளதாகவும் பின்பு எதற்காக பிளாட்பாரம் டிக்கெட் எடுக்க வேண்டும் என காவலரிடம் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
அதற்கு சபரி குமார், என்னையே எதிர்த்துப் பேசுகிறாயா என்று கேட்டு அந்தப் பயணியை அடித்துள்ளார். அப்பொழுது அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் அமித் குமார் மீனா இந்த சம்பவம் குறித்து கேட்டுள்ளார்.
தொடர்ந்து ரயில்வே காவல்துறையினர் பெரியமேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வருவதற்குள் காவலர் சபரிகுமார் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்தச் சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், சபரிகுமார் மது போதையில் போலீசாரை ஆபாசமாக பேசி தாக்க முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயன், சபரி குமாரிடம் நேற்று மதியம் முதலே விசாரணையில் ஈடுபட்டு வந்தார்.
விசாரணையில் காவலர் சபரி குமார் மதுபோதையில் பயணியை ஆபாசமாக பேசி அடித்ததும், அதனை தட்டிக் கேட்க வந்த ஆர்பிஎஃப் போலீஸ் மற்றும் ரயில்வே போலீசாரை தரக்குறைவாக பேசி அடிக்க முற்பட்டதும் உறுதியானது. இதனையடுத்து பெரியமேடு போலீசார் காவலர் சபரி குமார் மீது ஆபாசமாகப் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
– ராயல் ஹமீது.