தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 3 நகராட்சிகள், 9 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஹிஜாப் சர்ச்சை வெடித்த மேலூர் நகராட்சி 8வது வார்டில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. மேலூர் நகராட்சி 8வது வார்டில் திமுக வேட்பாளர் முகமது யாசின் 651 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். முகமது யாசினை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 125 வாக்குகளையும், பாஜக வேட்பாளர் 8 வாக்குகளையும் பெற்று டெபாசிட் இழந்தனர். ஹிஜாப் சர்ச்சையை கிளப்பிய பாஜக சார்பில் போட்டியிட்ட அம்சவேணி, வெறும் 10 ஓட்டுகளை மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார்.
மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எட்டாவது வார்டுக்கான தேர்தல் அங்குள்ள அல்அமீன் பள்ளியில் நடைபெற்றது. அங்கு ஹிஜாப் உடை அணிந்து வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாப்பை அகற்றிவிட்டு வாக்களிக்கும்படியும், அப்போதுதான் வாக்களிப்பவர்களும், வாக்காளர் அடையாள அட்டையில் இருப்பவர்களும் ஒரே ஆளா என்பதை உறுதிப்படுத்த முடியும் என வாக்குச்சாவடிக்குள் அமர்ந்திருந்த பாஜக முகவர் கிரிராஜன் வலியுறுத்தினார்.
பாஜக முகவரின் செயலுக்கு அனைத்துக் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர் சர்ச்சையை ஏற்படுத்திய பாஜக முகவர் வாக்குச் சாவடியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டார். அவருக்குப் பதிலாக அக்கட்சியின் வேறொரு முகவர் பணியமர்த்தப்பட்டார். தொடர்ந்து, ஹிஜாப் அகற்ற கூறிய விவகாரத்தில் மேலூர் காவல் துறையால் கைது செய்யப்பட்ட பாஜக முகவர் கிரிநந்தன், வருகின்ற நான்காம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஹிஜாப் சர்ச்சை வெடித்த மேலூர் நகராட்சி 8வது வார்டில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், மேலூர் நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில் திமுக 23 வார்டுகளிலும், காங் 01, அதிமுக 2, அமமுக 1 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
இதனிடையே, மேலூர் நகராட்சியில்
9ஆவது வார்டில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற அருண் சுந்தர பிரபு என்பவர், வெற்றி பெற்ற கையோடு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டதால் மேலூர் நகராட்சியில் திமுக கவுன்சிலர்களின் பலம் 24ஆக உயர்ந்துள்ளது.
– மதுரை வெண்புலி.