அரசு பள்ளியைச் சார்ந்த மானவர்கள் காரணமே இல்லாமல் ஆசிரியர்களைத் தாக்குவது மட்டுமல்லாமல் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி வருவதால் ஆசிரியர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி முதன்மைக் கல்வி அலுவலரிடம் முறையிட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம் மற்றும் உத்தமபாளையம் என மூன்று கல்வி மாவட்டங்கள் அமைந்துள்ளன. இவற்றில் அரசுப்பள்ளி மற்றும் தனியார் பள்ளி என 900க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. சுமார் ஒன்றரை லட்ச மாணவர்கள் பயிலும் தேனி மாவட்டத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து தேனி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களால் ஆசிரியர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. பெரியகுளம் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட தேவதானப்பட்டியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 900 மாணவர்கள் படிக்கின்றனர். அப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் குறிப்பிட்ட சிலர், கடந்த சில நாட்களாக அங்குள்ள ஆசிரியர்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மது போதையில் இருந்த ஒரு மாணவன் அரசுப் பள்ளி பெண் ஆசிரியை ஒருவரைத் தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கூறப்படுகிறது.
அந்த மாணவரைக் கண்டித்ததால் தொடர்ந்து இரண்டாவது நாளாகப் பள்ளிக்கு வந்த அந்த மாணவன் கத்தியைக் காட்டி ஆசிரியரை மிரட்டியதாகவும், மேலும் அந்த மாணவனுக்கு ஆதரவாக அதே ஊரைச் சேர்ந்த சிலர் மிரட்டல் விடுப்பதாகவும் சொல்லப்படுகிறது. தேனி மாவட்ட அரசுப் பள்ளிகளில் நிலவும் இந்த அசாதாரண சூழலைக் கண்டித்தும், தங்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கக் கோரியும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலரிடம் முறையிட்டனர்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து, பள்ளிகளில் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனவும், உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் முறையிட்டனர். பின்னர் சங்க நிர்வாகிகள் மற்றும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை அழைத்து முதன்மைக் கல்வி அலுவலர் செந்திவேல் முருகன் பேச்சுவார்த்தை நடத்தி விவரங்களைக் கேட்டறிந்தார். இதையடுத்து காரணமே இல்லாமல் ஆசியர்களைத் தாக்குவது மட்டுமல்லாமல் ஆயுதங்களைக் காட்டியும் அச்சுறுத்துகின்றனர். இதன் காரணமாக பள்ளிக்குச் செல்லவே ஆசிரியர்கள் அச்சம்கொள்கின்றனர். எனவே அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கக் கோரி முதன்மைக் கல்வி அலுவலரிடம் முறையிட்டுள்ளோம்” என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
– ராயல் ஹமீது.