‘அம்பேத்கர், ஈ.வெ.ரா.பெரியாரை கோட்சே கொலை செய்திருக்க வேண்டும்’ என வன்முறையைத் துண்டும் வகையில் பேசிய இந்துத்துவ ஆதரவாளரை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்தனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த சென்னை மாநகராட்சி தேர்தலில் 134ஆவது வார்டில், தன்னை கோட்சேவின் பேத்தி என்று கூறிக்கொண்ட உமா ஆனந்தன் என்பவர் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறித்து யூடியூப் சேனல் ஒன்று அந்தப் பகுதியில் வசிப்பவர்களிடம் கருத்து கேட்டது.
அப்போது ஈஸ்வர் சந்திரன் சுப்ரமணியன் என்பவர், “நான் ஆர்எஸ்எஸ்ஸில் இருந்திருக்கிறேன். இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து முன்னணியில் உறுப்பினர். நான் ஒரு இந்து தீவிரவாதி என்பதில் பெருமை கொள்கிறேன். நான் கோட்சேவை ஆதரிக்கமாட்டேன். அவர் காந்தி என்கிற பசுவைக் கொன்றார். அவர் நிஜமான இந்துவாக இருந்திருந்தால், தனி திராவிடஸ்தான் கேட்ட ஈ.வெ.ராமசாமியையும், தனி தலித்ஸ்தான் கேட்ட அம்பேத்கரையும், பாகிஸ்தானையும், ஆப்கானிஸ்தானையும், பங்களாதேஷையும் பிரித்த முகமது அலி ஜின்னா ஆகிய மூவரையும் கோட்சே போட்டு தள்ளிட்டு, காந்தியைப் போட்டு தள்ளிருந்தால், கோட்சே நிஜமான இந்து. அதனால் கோட்சேயுடன் உடன்பாடு கிடையாது” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவரான கண்ணதாசன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வென்ற 134ஆவது வார்டில் பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு வீடியோ ஒன்று யூடியூப்பில் வந்தது. அந்த வீடியோவில் பேசிய நபர் ஒருவர் தன்னை ஒரு இந்து தீவிரவாதி எனவும் ஈ.வெ.ரா, அம்பேத்கர், முகமது அலி ஜின்னா ஆகியோரை கோட்சே கொலை செய்திருக்க வேண்டும் எனவும் கூறியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடிய தலைவர்களை வன்மத்துடன் கொலை செய்ய வேண்டும் என அந்நபர் கூறியுள்ளார். அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசிய அந்நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். அதேபோன்று, திருப்பெரும்புதூர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் சந்தோஷ் என்பவரும் புகார் அளித்தார்.
இந்த நிலையில் தந்தை பெரியார், அன்ணல் அம்பேத்கர், முகமது அலி ஜின்னா ஆகியோரை கோட்சே கொலை செய்திருக்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஈஸ்வர் சந்திரன் சுப்ரமணியன் மீது கலவரத்தைத் தூண்டுதல், இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர், நேற்று அவரை கைது செய்தனர்.
– ராயல் ஹமீது.