கோவை மாநகரில் உள்ள பல சாலைகள், குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கே லாயக்கற்ற நிலையில் காட்சியளிக்கிறது. குறிப்பாக, ரேஸ்கோர்ஸ், தடாகம் சாலைகளின் நிலை படுபரிதாபம். ஆனால் இதையெல்லாம் கண்டும் காணாததுபோல் அதிகாரிகள் இருப்பதால், மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
கோவையில் முக்கிய சாலைகளான, தடாகம் ரோடு, விளாங்குறிச்சி ரோடு, திருச்சி ரோடு, கவுண்டம்பாளையம், ரேஸ்கோர்ஸ், அவினாசி ரோடு, உக்கடம், செல்வபுரம் என பல இடங்களில், நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி சார்பில், மேம்பால பணிகள், காஸ் குழாய் பதிப்பு, சூயஸ் குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் குழாய் பதிப்பு, கேபிள் இணைப்பு உள்ளிட்ட பணிகள் ஓராண்டுக்கும், மேலாக நடந்து வருகிறது. இப்பணிகள் யாவும் மிகவும் மந்தமாக நடப்பதால், சாலைகள் யாவும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. அதேசமயம், குழிகள் தோண்டப்பட்ட இடங்களில் எச்சரிக்கை பலகைகள் கூட வைப்பதில்லை. ஆளையே விழுங்கும் அளவுக்கு பள்ளங்களும், குழிகளும் உள்ள இந்த சாலைகளில், போக்குவரத்தை சீரமைக்க போலீசாரும் நியமிக்கப்படுவதில்லை. தினமும் இந்த சாலைகளில் ஏராளமான விபத்துகள் நடக்கின்றன. அவசர ஊர்திகள் கூட சரியான நேரத்திற்கு வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பாதாள சாக்கடை பணிகளுக்காக, வருமானவரித்துறை அலுவலகம், மற்றும் பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகம், கலெக்டர் பங்களா ஆகியவை அமைந்துள்ள சாலை மற்றும் பக்கவாட்டுப்பகுதிகளில் குழி தோண்டி சீரமைக்கப்பட்டது.ஆனால் திரும்பவும் சாலை அமைக்கப்படாமல், அப்படியே விடப்பட்டது. இதனால் ரேஸ்கோர்ஸ் ரவுண்டானா முழுக்க உள்ள தார்சாலை குண்டும் குழியுமாக உள்ளது.
தற்போது திருச்சி சாலை சுங்கத்தில், மேம்பால கட்டுமானப்பணிகள் நடைபெறுவதால் திருச்சி சாலையில் செல்லும் பஸ்கள், ரேஸ்கோர்ஸ் வழியாக சுங்கம் அடைந்து அங்கிருந்து வெவ்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன.சாலையிலுள்ள மேடு பள்ளத்தில் பஸ், கார், பைக், ஸ்கூட்டர் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல கடும் சிரமப்படுகின்றன. பயணிப்பவர்களும் அவதிக்குள்ளாகின்றனர். தினமும் மக்கள் படும் இந்த அவஸ்தையை புரிந்து கொண்டு, விரைந்து பணிகளை முடித்து, சாலைகள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.