சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் இளவட்ட மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம்.
நேற்று (புதன்கிழமை) இந்த ஆண்டிற்கான மஞ்சுவிரட்டை நடத்த கிராமத்தார்களால் முடிவு செய்யப்பட்டிருந்ததையொட்டி, சந்திவீரன் கூடத்தில் கூடிய நாட்டாா்கள், அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு காளைகளுக்கு வேட்டி, துண்டுகளை எடுத்துக் கொண்டு வேங்கைப்பட்டி சாலையில் உள்ள மஞ்சுவிரட்டு திடலான பெரிய பண்ணைக்காட்டிற்கு ஊா்வலமாக வந்தனா்.
அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலில்
காளைகளுக்கு சிறப்பு செய்து அவிழ்த்து விடப்பட்டன. அதைத் தொடர்ந்து வாடிவாசலுக்கு வெளியே காளைகள் ஒன்றொன்றாக ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டன. சேலம், கோவை, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட காளைகள் களமிறக்கப்பட்டன. காளைகளை, காளையா்கள் ஆா்வமாகப் பிடித்தனா்.
அவிழ்த்துவிடப்பட்ட காளைகளில் ஓரிரு காளைகள் பார்வையாளர்கள் கூட்டத்தில் புகுந்து, அங்கிருந்தவர்களை முட்டித்தள்ளின.
இந்த மஞ்சுவிரட்டில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டனர்.
அதில் சுமார் 6 பேர் மேல்சிகிச்சைக்காக மதுரை மற்றும் சிவகங்கை மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மற்றவர்கள் சிறு சிறு காயங்களுடன் வீடு திரும்பினர். இந்த விரட்டு மஞ்சுவிரட்டைக் காண சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் கூடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.