தமிழக அரசு மற்றும் மாநில ஆயுஷ் சங்கம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி சிங்கம்புணரி வட்டார பகுதியில் 50 இடங்களில் ஏறத்தாழ 10,000 நபர்களுக்கு சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு உருவாக்கும் களப்பணி ஒரு தொடர் நிகழ்வாக மாணவர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள் கூடும் இடங்களில் பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் அவர்களால் நடத்தப்பட்டது.
அதன் தொடர் நிகழ்வாக சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதல் சிங்கம்புணரி பேருந்து நிலையம் வரை விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பேரணி ஊர்வலத்தில் மாணவர்கள் சித்த மருத்துவ விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியதுடன், பொதுமக்களுக்கு சித்த மருத்துவத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக துண்டு பிரசுரங்களையும் வினியோகித்தனர்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பிரபாகரன் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் இருவரும் தலைமை தாங்கி சித்த மருத்துவம் குறித்து உரையாற்றினார்கள். மாணவர்கள் பேரணியை சிங்கம்புணரி பேரூராட்சித்தலைவர் அம்பலமுத்து மற்றும் பேரூராட்சி துணைத்தலைவர் இந்தியன் செந்தில் இருவரும் துவக்கிவைத்து சித்த மருத்துவத்தின் இன்றியமையாமை குறித்து மாணவர்களிடம் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் செல்லத்துரை முன்னிலை வகித்தார். பிரான்மலை அரசு சித்த மருத்துவர் சரவணன் விழிப்புணர்வுப் பேரணியின் நோக்கம் குறித்து மாணவர்களிடம் உரைத்து நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலையத்தின் பணியாளர்கள் மற்றும் சிங்கம்புனரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.