தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிங்கம்புணரி வட்டார பெண் ஆசிரியர்கள் சார்பில் மகளிர் தினம் கலைஞர் அரங்கத்தில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வட்டாரத் தலைவர் லதா தலைமை வகித்தார். வட்டார துணைத் தலைவர்கள் கலைமதி, செல்வி, துணைச் செயலாளர்கள் சிவந்திமாலை, சித்ராதேவி முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்க துணைத் தலைவர் கவிதா வரவேற்றுப் பேசினார். மாவட்ட துணைத்தலைவர் மாலா, துணைச் செயலாளர் ஜீவா ஆனந்தி, மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி மாவட்டத்தில் உள்ள பெண் வட்டார நிருவாகிகள், பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சுநாதன், வட்டார கல்வி அலுவலர்கள் சாந்தி, கலைச்செல்வி, இந்திராதேவி, ஜேம்ஸ் மற்றும் காந்திமதி நகைமாளிகை அதிபர் சிவக்குமார் ஆகியோர் மகளிர் தின உரையாற்றினர்.
மேலும், மகளிர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் ஆசிரியைகள் சிறப்பு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இதில் இந்தியா சுததந்திரம் வாங்கி 74 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மகளிருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்காததை இக்கூட்டம் கவலையோடு உற்று நோக்குவதோடு, வேலைவாய்ப்பில் உடனடியாக அனைத்துத்துறைகளிலும் 33 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்திடவேண்டும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களுக்கு அலுவலக நேரத்தை கடந்து கூடுதல் பணியாற்ற நிர்பந்திக்கக்கூடாது, பெண்கள் பணியாற்றும் அலுவலகங்களில் அவர்களுக்கென தனியான கழிப்பிட வசதி செய்து தரப்பட வேண்டும், ஆசிரியைகள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் பணியாற்றுவதால் பள்ளி நேரங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்,
மகளிருக்கென்று தனி பேருந்துகளின் எண்ணிக்கையை அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும், உலக மகளிர் தினமான மார்ச்-8 தேதியை அரசு பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும், உலகெங்கிலும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் அனைத்து விதமான இனப் பாகுபாட்டையும் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும், சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிராக பொது மற்றும் தனிப்பட்ட இடங்களில் நடக்கும் கடத்தல், பாலியல் ரீதியான துன்புறுத்தல் மற்றும் பிற வகை அத்துமீறல்கள் ஆகிய வன்முறைகளை ஒழிக்கப்பட வேண்டும், குழந்தைத் திருமணங்கள், கட்டாயத் திருமணம், பெண் உறுப்பு சிதைப்பு உள்ளிட்ட கொடூரச் செயல்களை அகற்ற வேண்டும், பெண்கள் பணிபுரியும் இடங்களில் குறைகேட்பு மையம் அமைப்பதுடன் மாதம் ஒரு முறை குறை கேட்பு முகாம் நடத்தப்பட வேண்டும், பெண் ஆசிரியர்கள் மகப்பேறு கால விடுப்பில் இருக்கும்பொழுது விடுமுறை காலத்துக்கு பதிலி ஆசிரியர் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதற்கு முன்னதாக பெண்களுக்கு எதிரான வன்முறை எதிரப்பு விழிப்புணர்வு பேரணியை காவல் ஆய்வாளர் ஜெயலெட்சுமி மற்றும் போக்குவரத்து காவலர் ஜெகநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பேரணியில் பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு வாசகங்களை ஏந்தி பெண் ஆசிரியர்கள் இரு சக்கர வாகனத்தில் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர்.
அதன்பின் நடைபெற்ற பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கான பாராட்டு விழாவில் சாந்தி, செல்வசுந்தரி, ராஜராஜேஸ்வரி ஆகியோர் பாராட்டுப் பெற்றனர். விழாவில் மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன், மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி, மாநிலப்பொதுக்குழு உறுப்பினர்கள் ஜோசப்ரோஸ், ஞானஅற்புதராஜ், குமரேசன், கல்வி மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், கல்வி மாவட்ட செயலாளர்கள் சிங்கராயர், சகாயதைனேஸ், ஜெயக்குமார், கூட்டுறவு சங்க தலைவர் பால்துரை, வட்டார செயலாளர் சுரேஷ் ஆரோக்கியராஜ் வாழ்த்திப் பேசினர். மாநில துணைத்தலைவர் ஆரோக்கியராஜ் நினைவு பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார். வட்டாரப் பொருளாளர் ஞானவிநாயகன் நன்றி கூறினார்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.