மதுரை மாவட்டம், கண்டுகபட்டியைச் சேர்ந்தவர் தனுஷ்கோடி. இவரது மகன் குபேரன் (வயது21). ஜேசிபி இயந்திர ஓட்டுனராகப் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று சிங்கம்புணரி அருகே சூரக்குடி பகுதியில் பணி செய்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது குபேரனின் அம்மா சாத்தம்மாளை மாடு முட்டியதில் படுகாயமடைந்து சிங்கம்புணரியில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அவருக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உடனடியாக குபேரன் தனது இருசக்கர வாகனத்தில் சிங்கம்புணரி நோக்கி வேகமாக வந்துள்ளார். அப்போது அவர் மது அருந்தியிருந்ததாகக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், காளாப்பூரைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சூரக்குடி நோக்கிச் சென்று கொண்டிருந்திருக்கிறார்.
புதுப்பட்டி அருகே கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரது வாகனங்களும் நேருக்குநேர் மோதியதில், குபேரன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவலறிந்த எஸ்.வி.மங்கலம் காவல்துறையினர் விரைந்து வந்து குபேரனின் சடலத்தைக் கைப்பற்றி, பிணக்கூறாய்வுக்காக சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்த ராஜேஷ், சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சம்பவம் குறித்து எஸ்.வி.மங்கலம் காவல் ஆய்வாளர் விஜயன், வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.