சிங்கம்புணரி பேரூராட்சி கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர்!
ஒரே அதிமுக கவுன்சிலரும் திமுகவிற்குத் தாவினார்!
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில், 14ல் திமுக வேட்பாளர்களும் (1வது வார்டில் அம்பலமுத்து மற்றும் 5ஆவது வார்டில் வள்ளி மனோகரன் இருவரும் போட்டியின்றித் தேர்வு), காங்கிரஸ் வேட்பாளர்கள் இரண்டு வார்டுகளிலும், அதிமுக ஒரு வார்டிலும், பாஜகவை சேர்ந்த ஒருவர் சுயேட்சையாகவும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், 17வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கக்கன் ராஜாவும், 11 ஆவது வாா்டில் சுயேச்சையாகப் போட்டியிட்ட பாஜகவைச் சோ்ந்த சங்கர் என்பவரும் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
எனவே, சிங்கம்புணரி பேரூராட்சியில் திமுக கவுன்சிலர்கள் பலம் 16ஆக உயர்ந்தது. கடைசியாக அமைந்திருந்த பேரூராட்சி நிர்வாகத்தில் சேர்மன் பதவியைக் கைப்பற்றிய அதிமுகவிற்கு இந்த முறை ஒரு கவுன்சிலர் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தபடி இன்று அனைத்து கவுன்சிலர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
மேலும், பேரூராட்சித் தலைவர் மற்றும் பேரூராட்சித் துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுகத்தேர்தல் வரும் 4ஆம் தேதி நடைபெறுகிறது.
அன்றைய தினம் காலையில் பேரூராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலும், பிற்பகலில் பேரூராட்சி துணைத் தலைவர் தேர்தலும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நம்பிக்கை வைத்து கவுன்சிலர்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் எனவும்,
தன்னை முதல்வராக்கிய மக்களின் நலனுக்காக ஒவ்வொரு நாளும் திட்டங்களை அறிவித்து, அதனைச் செயல்படுத்த ஓயாமல் உழைக்கும் தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கரத்தை கவுன்சிலர்கள் வலுப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை பொதுமக்களிடையே நிலவுகிறது.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.