நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது (திமுக 16, காங்கிரஸ் 2).
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூராட்சியின் உறுப்பினர்களுக்கு நேற்று காலை சிங்கம்புணரி பேரூராட்சியின் செயல் அலுவலரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான முகமது ஜான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவிப்பிரமாணம் நிகழ்ச்சி முடிந்தவுடன் கவுன்சிலர்களின் உறவினர்களும், நண்பர்களும் கூடியிருந்து அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்நிலையில், பல்வேறு யூகங்கள், எதிர்பார்ப்புகளுக்கிடையே சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளராக ந.அம்பலமுத்து (வயது50) இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் பேரூராட்சியின் 1வது வார்டில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சிங்கம்புணரியில் திமுக இமாலய வெற்றி பெறுவதற்கு, அம்பலமுத்து கடும் உழைப்பைத் தந்தவர்.
இவர் ஏற்கனவே கடந்த 2001-2006 ஆண்டில் சிங்கம்புணரி பேரூராட்சித் தலைவராகப் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை நடைபெற உள்ள பேரூராட்சித் தலைவர் தேர்தலில், அம்பலமுத்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.