சிங்கம்புணரி பேரூராட்சிக்கு கடைசியாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பெரும்பான்மை பெற்று பேரூராட்சியைக் கைப்பற்றிருந்தது.
ஆனால், கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிங்கம்புணரி பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வாா்டுகளில், 14 வாா்டுகளை திமுக கைப்பற்றியது. கூட்டணி கட்சியான காங்கிரஸ் 2 வாா்டுகளையும், அதிமுக ஒரே ஒரு வாா்டையும், பாஜகவை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் ஒரு வாா்டையும் கைப்பற்றினா். பின்னா் அதிமுக கவுன்சிலரும், சுயேச்சை கவுன்சிலரும் திமுகவில் ஐக்கியமானதால் திமுக கூட்டணியின் பலம் 18 ஆக உயா்ந்தது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தலைவா் தோ்தலில் ஏற்கெனவே திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட அம்பலமுத்து, பேரூராட்சித் தலைவராக போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டாா். அதைத்தொடா்ந்து மாலையில் நடைபெற்ற துணைத் தலைவா் தோ்தலில், மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலா் செந்தில்குமார் @ இந்தியன் செந்தில் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
இருவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு அவர்களது ஆதரவாளர்களும் உறவினர்களும் நண்பர்களும் பெருமளவில் கூடிநின்று வாழ்த்துகள் தெரிவித்தனர். அதன்பின்பு இருவரும் சிங்கம்புணரி பேருந்துநிலையம் முன்புறம் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
கடந்த முறை சிங்கம்புணரி பேரூராட்சியில் முழு பலத்துடன் நிர்வாகம் செய்த அதிமுகவுக்கு, தற்போது ஒரு கவுன்சிலர் கூட இல்லாமல் மிக பலவீனமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.