நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின்பு சிங்கம்புணரி பேரூராட்சி தலைவராக அம்பலமுத்து மற்றும் துணைத் தலைவராக இந்தியன் செந்தில் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பணிகளை துவக்கியுள்ளனர்.
இருவரும் சிங்கம்புணரி பேரூராட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு கோரிக்கைகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனிடமும், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியிடமும் சமர்ப்பித்துள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக சீமைக் கருவை இல்லா சிங்கம்புணரியை உருவாக்கும் நோக்கில், இரண்டு தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற செட்டியார் ஊரணி புணரமைப்பு துவக்க நிகழ்ச்சியின்போது பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து
சார்பில் அமைச்சரிடம் ஜேசிபி எந்திரங்கள் ஒதுக்கித் தர கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பரிந்துரையின் பேரில் சிங்கம்புணரி பேரூராட்சிக்கு 2 ஜேசிபி எந்திரங்களை ஒதுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டார்.
நேற்று ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அந்த ஜேசிபி எந்திரங்களை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கொடியசைத்து துவக்கி வைத்து, சிங்கம்புணரி மக்களுக்கு அர்ப்பணித்தார்.
நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, பேரூராட்சி துணைத்தலைவர் இந்தியன் செந்தில் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் ஜான் முகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.