சைபர் குற்றங்களை தடுக்க பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படும்! S.P. செல்வ நாகரத்தினம் தகவல்!!

கோவையில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக தேசிய அளவில் கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரி ஆகியவை பொறிக்கப்பட்ட விழிப்புணர்வு பதாகையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
கோவை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்துக்கு நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் கடந்த ஆண்டு 21 புகார்களும், இந்த ஆண்டு 13 புகார்களும் வந்து உள்ளது. இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். ரூ.18 லட்சத்து 57 ஆயிரத்து 787 கைப்பற்றப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இது தவிர ரூ.40 லட்சத்து 81 ஆயிரத்து 113 முடக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதில் 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தற்போது சைபர் குற்றங்கள் அதிகமாகி வருகிறது. படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரிடமும் மோசடி நடைபெறுகிறது. வங்கியில் இருந்து பேசுகிறேன், வாடிக்கையாளர் சேவை பிரிவில் இருந்து பேசுகிறேன் என்றுக்கூறி செல்போனில் தொடர்பு கொண்டு மோசடி செய்வது அதிகளவில் நடந்து வருகிறது. இதுபோன்ற புகார்களை பெற 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் செயல்பாட்டில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் இழந்த பணத்தை உடனடியாக மீட்க முடியும்.

இதற்கிடையில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் புறநகர் பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று(நேற்று முன்தினம்) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 74 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இது எந்தெந்த பிரிவின் கீழ் வருகிறது என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.
இதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். சைபர் குற்றங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவையில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பிரசார கூட்டங்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சுஹாசினி, ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp