தமிழகத்தையே உலுக்கிய கோகுல்ராஜ் ஆணவப்படுகொலை வழக்கு! யுவராஜ் உள்பட10 பேர் குற்றவாளிகள்!

சேலம் மாவட்டம் ஓமலுரை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ், 2015 ஆம் ஆண்டு தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டார். வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், இன்று மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. யுவராஜ் உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் 10 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

சேலம் ஓமலூரைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜூம், நாமக்கல்லைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த சுவாதியும் காதலித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி இருவரும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தீரன் சின்னமலைக்கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ் இருவரையும் மிரட்டி உள்ளார். பிறகு ஸ்வாதியை அனுப்பிவிட்டு கோகுல்ராஜை தன்னுடைய காரில் அழைத்துச் சென்றார். பின்னர், மறுநாள் காலையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக கிடந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இந்தக் கொலையில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேருக்கு தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில், இந்த சாதி ஆணவப் படுகொலை வழக்கை தீவிரமாக விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி.விஷ்ணுப்ரியா திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து இந்த கோகுல்ராஜ் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. 2018 ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் இவ்வழக்கு விசாரணை நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் கோகுல்ராஜின் காதலி சுவாதி உட்பட மொத்தம் 116 சாட்சிகள் சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. அரசுத்தரப்பு வழக்கறிஞரை மாற்ற கோரி கோகுல்ராஜின் தாயார் தொடர்ந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது . இதன்பின்னர் அரசு வழக்கறிஞர் மாற்றப்பட்டு இந்த வழக்கானது 2019ம் ஆண்டு மே 5ம் தேதி முதல் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கின் விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் முழுமையாக நிறைவடைந்த நிலையில், மார்ச் 5ஆம்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று மதுரை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்தது. இந்த வழக்கில் என்ன தீர்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே இருந்தது.

இந்த நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி சம்பத்குமார் இன்று தீர்ப்பு வழங்கினார். அதில் யுவராஜ், அருண், குமார், சங்கர், அருள்வசந்தம், செல்வகுமார், யுவராஜின் சகோதரர் தங்கதுரை, சதீஷ்குமார், பிரபு என்ற ஸ்ரீதர், ரஞ்சித் ஆகிய 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிபதி, தண்டனை விவரம் வரும் 8ஆம் தேதி அறிவிக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த வழக்கில் 2 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார்.

– மதுரை வெண்புலி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp