தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது.
இதுபோல் கோவையை அடுத்த மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் 7-வது படைவீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த கோவிலில் நேற்று பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோ பூஜை நடத்தப்பட்டு, 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
இதற்காக நேற்று முன்தினம் இரவு முதலே பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலை கோவிலுக்கு பாதயாத்திரையாக பால் குடங்கள் மற்றும் தீர்த்தக்காவடி எடுத்து சுவாமியை தரிசனம் செய்ய நடந்து வந்தனர்.
அவர்கள் கொண்டு வந்த பால் மற்றும் தீர்த்தக் குடங்களில் இருந்து ஆதி மூலஸ்தானத்தில் உள்ள மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வயானைக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இதையடுத்து சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வயானை வெள்ளி கவசத்தில் அருள்பாலித்தனர். அதைத்தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் கொண்டு வந்த பால்குடங்கள் தீர்த்தக் காவடிகளால் மூலவர் முருகன் -வள்ளி தெய்வானைக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு முருகன், வள்ளி -தெய்வானையுடன் அர்த்த மண்டபத் தில் எழுந்தருளினார். மதியம் 12.50 மணி அளவில் சுப்பிரமணிய சுவாமி -வள்ளி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் கோவிலை சுற்றி வீதி உலா வந்தார். அப்போது பக்தர்கள் மருதமலை முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகராஎன்ற பக்தி முழக்கமிட்டனர்.
மேலும் பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து முருக பக்தர்கள் விரதம் இருந்து நீண்ட அலகு குத்தியும், வேல் ஏந்தி வந்தும் காவடிகள் எடுத்து வந்தும் சுப்ரமணிய சுவாமி -வள்ளி தெய்வயானையை தரிசனம் செய்தனர். வடவள்ளியில் இருந்து மருதமலை மலைக்கோவிலுக்கு செல்லும் வழிநெடுக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பக்தி அமைப்பினர் பக்தர்களுக்கு குளிர்பானம், மோர், சர்பத், பிரசாதம் போன்றவற்றை வழங்கினர்.
மாலை 6.30 மணி அளவில் சுப்ரமணிய சுவாமி தங்க ரதத்தில் கோவிலை உலா வந்தார். பக்தர்கள் தங்க ரதம் இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து இரவு சாயரட்சை பூஜை நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பங்குனி உத்திரத்தையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. வடவள்ளி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-S.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.