கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல பாம்பு பிடி வல்லுனரான வாவா சுரேஷ்.
`பாம்பு மனிதன்’, `பாம்பு பிடி மன்னன்’ என்றழைக்கப்படும் வாவா சுரேஷ், ராஜநாகம் உட்பட 50,000க்கும் மேற்பட்ட பாம்புகளைப் பிடித்திருக்கிறார்.
சிறிய பாம்புகள் முதல் கரு நாகப்பாம்பு உள்ளிட்ட அரியவகை பாம்புகளைப் பிடிப்பதோடு மட்டுமல்லாமல், பாம்பு பிடிப்பது தொடர்பான வீடியோ காட்சிகளையும் வெளியிட்டு வருவார்.
இந்நிலையில், கடந்த ஜனவரி 31ஆம் தேதி கேரள மாநிலம் கோட்டயத்தில் நல்ல பாம்பு ஒன்றை பிடிக்க முயன்றபோது வாவா சுரேஷை அந்தப் பாம்பு கடித்தது. கோட்டயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாவா சுரேஷ், சுயநினைவை இழந்த நிலையில் அவர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். பின்பு கடந்த பிப்.7ஆம் தேதி அவர் முழுமையாகக் குணமடைந்து வீடு திருப்பினார். மேலும் ‘தான் உயிருடன் இருக்கும்வரை பாம்புகளை பிடிப்பேன். மிகுந்த கவனத்துடன் பணியாற்றுவேன்’ என வாவா சுரேஷ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதிக்குள் நேற்று முன்தினம் நுழைந்த 12 அடி நீளமுள்ள ராஜநாகத்தை வாவா சுரேஷ், அலேக்காக தட்டித் தூக்கி சாக்குப்பையில் போட்டு எடுத்து செல்லும் காணொலி வெளியாகியுள்ளது.
– பாரூக்.