கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடையை சேர்ந்தவர் ராமர்(வயது 60). இவர் தனது நண்பர்களான கருப்புசாமி, கரட்டுமேட்டை சேர்ந்த ராஜ்குமார் ஆகியோருடன் கடந்த 21-ந் தேதி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாலுகா கரிக்கையூர் அருகே பங்களா குழி என்ற இடத்தில் உள்ள தனியார் எஸ்டேட்டில் திருட்டுத்தனமாக சந்தன மரங்களை வெட்டி கடத்தி வர சென்றனர்.
அவர்கள், அங்கிருந்து 4 கிலோ சந்தன மரக்கட்டையை எடுத்துக்கொண்டு, 23-ந் தேதி சிறுமுகை வனச்சரகம் கூத்தாமண்டி தெற்கு சுற்று தூம்புபள்ளம் வனப்பகுதி வழியாக வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது, திடீரென அருகில் உள்ள புதரில் இருந்து வெளியே வந்த காட்டுயானை அவர்களை துரத்தியது. உடனே 3 பேரும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு தலைதெறிக்க ஓடினர். இதில், எதிர்பா ராதவிதமாக காட்டுயானையின் பிடியில் ராமர் சிக்கினார். காட்டு யானை தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே மற்ற 2 பேரும் மேட்டுப்பாளையத்துக்கு திரும்பினர். ஆனால் அவர்கள், போலீஸ் விசாரணைக்கு பயந்து ராமரை காட்டு யானை தாக்கி கொன்றது குறித்து வெளியே கூறாமல் மறைத்தனர். ஆனாலும் மனஉளைச்சலுக்கு ஆளான கருப்புசாமி, இன்று சிறுமுகை போலீஸ் நிலையத்துக்கு சென்று, கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுமுகை வனப்பகுதியில் காட்டுயானை தாக்கி ராமர் இறந்த தகவலை கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதயரேகா, சப்-இன்ஸ்பெக்டர் காசிபாண்டி, வனச்சரகர் செந்தில் குமார், வனவர் கணேஷ், வனக்காப்பாளர் ஹரிஷ் பாபு ஆகியோர் கருப்புசாமியுடன் தூம்புபள்ளம் வனப்பகுதிக்கு சென்றனர். அங்கு உடல் அழுகிய நிலையில் ராமர் இறந்து கிடப்பது தெரியவந்தது. பின்னர் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-கோவை மாவட்ட தலைமை நிருபர்
சி.ராஜேந்திரன்.