சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த முறை, அதாவது 2019ஆம் ஆண்டு ஜனநாயக முறைப்படி முஸ்லிம் ஆண் வாக்காளர்கள் வாக்களித்து நிர்வாகக் கமிட்டி தேர்வு நடைபெற்றது.
மூன்று வருடங்கள் கழிந்த பின்பு கடந்த 27/03/22 அன்று தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி தலைவர் பதவிக்கு முஹம்மது இஸ்மாயில், சாகுல் ஹமீது, பீர் முகமது ஆகிய நான்கு பேர் போட்டியிட்டனர். செயலாளர் பதவிக்கு கான் முஹம்மது, சிக்கந்தர் பாதுஷா, அகமது ஆகிய மூவரும் போட்டியிட்டனர்.
பொருளாளர் பதவிக்கு கோல்டன் அயூப்கான், ப்ரோஸ் கான் ஆகிய இருவரும் போட்டியிட்டனர். திருப்பத்தூர் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு உட்பட்ட திருப்பத்தூர், புதுப்பட்டி, திருக்கோஷ்டியூர், ஊர்குலத்தான்பட்டி, சிறுகூடல்பட்டி, கும்மங்குடிபட்டி ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிவாசல்களுக்கு உட்பட்ட இசுலாமியர்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்தனர். தேர்தல் நாளன்று திருப்பத்தூர் லிம்ரா மெட்ரிகுலேஷன் பள்ளியில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.
காவல்துறையினர் பாதுகாப்புடன், 3 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு, வாக்காளர்களுக்கு கையில் மை வைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. அன்று மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் மொத்தமுள்ள 3072 வாக்குகளில் 1332 வாக்குகள் மட்டும் பதிவாகின.
அதன்படி தலைவராகப் போட்டியிட்ட முகமது இஸ்மாயில் 476 வாக்குகள் பெற்று 33 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட சிக்கந்தர் பாதுஷா 668 வாக்குகள் பெற்று, 129 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட அயூப்கான் 771 வாக்குகள் பெற்று, 248 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள மற்ற ஊர்களில் ஜமாத் தேர்தல் நடத்தப்படுவதற்கு, அந்தந்த ஊர்களில் இருந்து விண்ணப்பித்தால் தேர்தல் நடத்தி தரப்படும் என வக்பு ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இராமநாதபுரம் சரக வக்ஃபு கண்காணிப்பாளர்,
வக்பு வாரிய சரக அலுவலகம்,
159/3 & 4, தர்ப்ப சயனம் சாலை,
வெளிப்பட்டினம்,
ராமநாதபுரம்-623 504
தொலைபேசி: 04567-220053.
– ராயல் ஹமீது.