ஹிஜாப்பிற்கு தடை விதித்த கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு எதிராக சிங்கம்புணரியில் கண்டன ஆர்ப்பாட்டம்! சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு நடத்தியது!
கர்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்ல அந்த மாநில அரசு தடை விதித்தது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் ஹிஜாப் தடை செல்லும் என அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனிடையே, இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தத் தீர்ப்பை கண்டித்து கர்நாடக பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முஸ்லிம் பெண்கள் உட்பட அனைவரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து கொண்டு கல்லூரிக்கு வருவதை கர்நாடக பாஜக அரசு தடுப்பதாக கூறி, சிங்கம்புணரி பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தை தமிழ் தேசிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு, எஸ்டிபிஐ கட்சி, தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி, இஸ்லாமிய இளைஞர் அணி மற்றும் பத்திரிக்கையாளர்களை உள்ளடக்கிய சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு முன்னெடுத்தது.
நேற்று (28/03/2022) மாலை 5மணிக்கு சிங்கம்புணரி பேருந்து நிலையத்தின் முன்பாக ஆரப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களும், பொதுமக்களும் பங்கேற்று, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான தங்களது கண்டனத்தைத் தெரிவித்து, முழக்கங்களை எழுப்பினர்.
நாட்டில் நிலவி வரும் சமூக நல்லிணக்கத்திற்கு எதிராகவும், சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையிலும் இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மத்தியில் ஆளும் பாஜகவிற்கும் கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை பறம்புமலை பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கர்ணன் ஒருங்கிணைக்க, திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதி SDPIயின் செயலாளர் அன்வர்தீன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் மதுரை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் வாஞ்சிநாதன், மருது மக்கள் இயக்கத்தின் தலைவர் முத்துப்பாண்டி, SDPIயின் மதுரை மாவட்டத் தலைவர் பிலால்தீன், எரிகாற்று குழாய் எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கம்பூர் செல்வராசு ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். முன்னதாக, மனிதநேய மக்கள் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் கமரல் ஜமான் வரவேற்புரை நிகழ்த்த, இறுதியாக சிங்கம்புணரி இசுலாமிய இளைஞர் அணியின் பொருளாளர் அப்துர் ரகிம் சேட் நன்றியுரையாற்றினார். கேம்பஸ் பிரண்ட ஆஃப் இந்தியா மாணவர் அமைப்பினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிங்கம்புணரி காவல் ஆய்வாளர் தடை விதித்தும், ஆர்ப்பாட்டத்தைத் தடுக்க, கடும் கெடுபிடி செய்தும், பெரும் மக்கள் திரள் காரணமாக ஆர்ப்பாட்டம் நடைபெறுவதைத் தடுக்க இயலவில்லை. இக்கூட்டத்தில் பெண்களும், ஆண்களுமாக 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பலரும், நீதிமன்றங்கள் இசுலாமிய விரோதபோக்கோடு செயல்படுவது தொடர்கதையாகி வரும் நிலையில், யாரோ சிலரின் நிர்பந்தத்திற்கு ஆட்பட்டு சனநாயகப் பாதையில் போராடும் மக்களின் குரல்வளையை நெறிக்கும் சிங்கம்புணரி காவல் ஆய்வாளர் போன்ற அதிகாரிகள் மக்களின் போராட்டத்தை எந்த வடிவில் இருக்க வேண்டுமென விரும்புகின்றனர்? எனும் விடைதெரியாத கேள்விகளுடன் கலைந்து சென்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் வழக்கறிஞர் பாவல், இளஞ்சென்னியன் மற்றும் தங்க அடைக்கன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இஸ்லாமிய பெண்கள் அதிக அளவில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
– பாருக், சிவகங்கை மாவட்ட தலைமை நிருபர்.
One Response
Good move. To be appreciated.