தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சிலர், ஆசிரியர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்வது, வகுப்பறையிலேயே ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதே நடனமாடுவது, மாணவ மாணவிகள் புகைப்பிடிப்பது, பீர் சாப்பிடுவது என ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடும் காணொலிகள் வெளியாகி, பெற்றோர்கள் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வகுப்பறையில் தூங்குவது, சீருடை பட்டனை கழற்றிவிட்டு ரவுடி தோரணையில் பள்ளிக்கு வருவது, ஆசிரியர்களைக் கிண்டல் கேலி செய்வது போன்ற அநாகரிகமான செயல்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சமுக வலைதளங்களில் வலம் வரும் காணொலி ஒன்றில், ‘ஒரு வகுப்பறையில் மாணவ மாணவிகள் விளையாடுவதும், அவர்களுக்குப் பின்னால் மாணவர்கள் இருக்கைகளில் படுத்து தூங்குவதும்’ பதிவாகியுள்ளது.
அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் பாடல்களுக்கு, ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது, மாணவர்கள் நடனமாடும் காணொலி ஒன்றும் வெளியாகியுள்ளது.
அதுபோன்று, கடந்த மாதம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியம் வேப்பேரி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் ஒருவர் தென்னங்கீற்று தொடப்பத்தால், வகுப்பில் உள்ள சக மாணவர்களை விரட்டி விரட்டி அடிக்கும் காணொலிக் காட்சி வெளியாகி வைரலானது
கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் படிக்கும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியரைத் தகாத வார்த்தைகளால் பேசி, தாக்க முயன்ற காட்சி வெளியானது. அதில் சட்டை பட்டனை கழற்றிவிட்டு ஒரு மாணவர் கையை ஓங்கி ஆசிரியரை அடிக்கச் செல்வது பதிவாகியுள்ளது.
இந்த காணொலி வைரலானதைத் தொடர்ந்து மதனூர் அரசுப் பள்ளியில் கோட்டாட்சியர், வட்டாட்சியர் விசாரணை நடத்திய நிலையில் தவறு செய்த மாணவர்கள் மீது இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அன்றைய தினம் என்ன நடந்தது என்று மாதனூர் அரசு பள்ளி வட்டாரத்தில் பத்திரிக்கையாளர்கள் விசாரித்ததில்,
“கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி தாவரவியல் ஆசிரியர் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களிடம் நாளை வரும் போது ரெக்கார்டு நோட்டு எடுத்து வாருங்கள் செய்முறை தேர்வு உள்ளது என்று கூறியுள்ளார். மறுநாள் ஏப்ரல் 21ஆம் தேதி ஆசிரியர் வகுப்புக்குப் பாடம் எடுக்க சென்ற போது, இரண்டு மாணவர்கள் வகுப்பறையிலேயே குறிப்பாக வகுப்பு நேரத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அவர்களை எழுப்பி ரெக்கார்டு நோட்டு கேட்ட போது தான், சில மாணவர்கள் இப்படி ஒரு செயல்களைச் செய்துள்ளனர். அதை மற்ற மாணவர்கள் வீடியோ எடுத்து நண்பர்களுக்குப் பகிர்ந்துள்ளனர்” என்றனர்.
இதைப்பற்றி அரசு பள்ளியின் முன்னாள் ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், “வியாபாரிகள் எப்படி வாடிக்கையாளர்களை கடவுளாகக் பார்க்கிறார்களோ. அப்படிதான் நாங்கள் மாணவர்களைக் கடவுளாக பார்க்கிறோம். மாணவர்கள் இருந்தால்தான் வாத்தியாருக்குப் பிழைப்பு. மாணவர்கள் குறைவாக இருக்கும் பள்ளியை அரசு இழுத்து மூடுகிறது. வெளியில் சொன்னால் அரசுப் பள்ளிகள் மீது தவறான தோற்றம் வந்துவிடும் என்பதற்காக மாணவர்கள் செய்யும் தவறுகளை வெளியில் சொல்லாமல் மறைத்து வருகிறோம்.
தற்போது மாணவர்கள் மத்தியில் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனா காலங்களில் ஆன்லைன் வகுப்பு எடுத்ததால் அனைவரும் செல்போன் எடுத்துவந்து ரீல்ஸ் செய்கிறார்கள். அதோடு தேவை இல்லாத படங்களை பார்க்கிறார்கள். வகுப்பறையிலேயே போதையுடன் இருக்கிறார்கள். அந்த மாணவர்களைக் கண்டித்தால் ஆசிரியர்களை அசிங்கமாகப் பேசி தாக்குகின்றனர்.
இதுபோன்ற மாணவர்களை சில சாதி கட்சியினரும் சங்கத்தினரும் ஊக்குவிக்கிறார்கள். உதாரணமாக, விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் சிறந்த ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவர் பாட்டு பாடி மாணவர்கள் சோர்ந்து போகாத அளவுக்கு வகுப்பு எடுப்பார்.
அப்படிப்பட்ட ஆசிரியர் வகுப்பு எடுக்கும்போது சரியாக கவனிக்காமலிருந்த மாணவியை அழைத்துக் கண்டித்துள்ளார். மறுநாளும் சொன்னதைச் செய்யாமல் வந்த அந்த மாணவியை அழைத்து நீ ஒரு ஸ்டூடண்ட். இப்படி சினிமாகாரி போல் வரலாமா, எதற்காக இத்தனை பொட்டு? என்று கோபமாகக் கேட்டுவிட்டார்.
இந்த விவகாரம் தலைமை ஆசிரியர் வரை சென்றது. தகவல் தெரிந்து காவல்துறையினரும் பள்ளிக்கு வந்தனர். மாணவியைக் கண்டித்த ஆசிரியரை அழைத்து, ’ அப்படி பேசவில்லை’ என்று பொய் சொல்லுங்கள் என்று கேட்டனர். அதற்கு அந்த ஆசிரியர் நான் பொய் சொல்லமாட்டேன் உண்மையைச் சொல்கிறேன். மாணவியின் பெற்றோர், இது தவறு என்று கூறினால் மன்னிப்பு கேட்கிறேன் என்றார்.
பின்னர் பள்ளிக்கு வந்த அந்த மாணவியின் பெற்றோரிடம் நடந்தவற்றைப் பற்றி தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்தப் பெற்றோர், தங்கள் மகளுக்கு ஆதரவாக ஆசிரியரின் செயல் தவறு என்று சொன்னார்கள். உடனே மாணவர்கள் மத்தியில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஆசிரியரை அடித்தார்கள். மாணவியின் சாதி சங்கத்தினர் போராட்டம் செய்ததால் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இப்படித்தான் போகிறது அரசுப் பள்ளி நிலைமை” என்றார்.
அரசுப் பள்ளி ஆசிரியர் சங்க நிர்வாகியான பாரி மாணவர்களின் செயல்பாடுகள் குறித்துக் கூறுகையில், ” கொரோனா வைரஸ் தொற்று பரவியபோது பள்ளிக்கு விடுமுறை அளித்து ஆல் பாஸ் போட்டதால், இப்போது மாணவர்கள் படிக்க ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்கள். புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்கள் முதல்வரைச் சந்தித்து ஆல் பாஸ் போடுங்கள் தேர்வு வேண்டாம் என்கிறார்கள்.
மாணவர்களுக்கு உண்மையிலேயே மனநல மருத்துவர் ஆலோசனைகள் தேவை, மாணவர்களைப் படிக்க வைக்கக் கஷ்டமாக இருக்கிறது. பதினோராம் வகுப்பு மாணவர்களுக்குக் கணக்கு சரியாகத் தெரியவில்லை, வகுத்தல் தெரியவில்லை. கேட்டால் எனக்கு வராது என்கிறான். +1 மாணவர்கள் படிக்கத் திணறுகிறார்கள். காரணம் கொரோனா பரவல், ஆன்லைன் வகுப்பு, விடுமுறை என படிக்காமலேயே 9ஆம் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்பு அடுத்தது +1 இப்படி பாஸ் போட்டதன் விளைவுதான். மாணவர்களுடன் பெரும் போராட்டத்தைச் சந்தித்து வருகிறோம், மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்து கவலையாக உள்ளது” என்றார்.
மாணவர்களின் செயல்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், “ஆசிரியர்களை இரண்டாவது அன்னையாக பார்க்கிறோம். அவர்களிடம் மாணவர்கள் இவ்வாறு நடந்துக்கொள்ளும் போது மனவேதனை அளிக்கிறது. அமைச்சராக மட்டுமல்லாமல் இரு குழந்தைகளுக்கு அப்பாவாக எனக்கு மனவேதனை அளிக்கிறது. கொரோனாவால் பள்ளிக்கு வராத காரணத்தால் மாணவர்களிடத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அவர்களை சுற்றி இருக்கக்கூடிய இந்த சமூகத்தால் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்யவேண்டிய கடமை உள்ளது. மாணவர்களை நல்வழிப்படுத்த கவுன்சிலிங் வழங்கப்படும்” என்று கூறினார்.
– பாரூக்.