கோவை உக்கடத்தில் மேம்பாலப் பணிகளுக்கு இடையூறாக உள்ள, ஆறு மரங்கள் வெட்டப்படாமல் இடமாற்றம் செய்யும் பணி, நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடக்கிறது.
உக்கடத்தில் இருந்து செல்வபுரம் செல்லும் புறவழிச்சாலையில், மீன் மார்க்கெட் அருகில் உள்ளது டோபி கானா. மேம்பாலப் பணிகளுக்காக இங்கிருந்த சில கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன. அதே பகுதியில் இருக்கும் 12 மரங்களில், ஆறு மரங்கள் நன்கு வளர்ந்த நிலையில் மேம்பால கட்டுமானத்துக்கு இடையூறாக இருப்பதாக, அடையாளம் கானப்பட்டது.
இதையடுத்து, மரங்களை மறு நடவு செய்ய, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் மணிவண்ணன் மேற்பார்வையில் குழு அமைக்கப்பட்டது. இயற்கை ஆர்வலர் சையத் மற்றும் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ரோஜா வழி காட்டுதலின்படி, இதற்கான பணி கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது.
சுமார் 50 வயது மதிக்கத்தக்க மூன்று அரச மரங்கள், இரண்டு வேப்ப மரம், ஒரு அத்தி மரத்தின் கிளைகள் மட்டும் வெட்டப்பட்டன. மரம் காய்ந்து போகாமல் இருக்க, வெட்டப்பட்ட இடத்தில் சாக்கு மற்றும் சாணம் வைத்து கட்டப்பட்டது. பெரிய ராட்சத கிரேன் உதவியுடன், வேருடன் மரங்கள் அகற்றப்பட்டு அதே பகுதியில் கட்டுமானத்துக்கு இடையூறு இல்லாத இடத்தில், மறு நடவு செய்யப்படுகிறது!!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.