இளையராஜா, மோடியை புகழ்ந்ததன் பின்னணி! இரண்டு முறை அனுப்பப்பட்ட ஜிஎஸ்டி சம்மன் காரணமா?

இசையமைப்பாளர் இளையராஜா, பிரதமர் மோடியையும் அண்ணல் அம்பேத்கரையும் ஒப்பிட்டு மோடி பற்றிய ஒரு புத்தகத்திற்கு முன்னுரை எழுதியிருந்தார்.

அந்த முன்னுரையில் பிரதமர் மோடியின் பல திட்டங்களைக் குறிப்பிட்டுப் பாராட்டிய இளையராஜா, இன்றைய பிரதமர் மோடி அம்பேத்கருக்கு இணையானவர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஒப்பீட்டுக்கு சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பிலிருந்தும் இளையராஜாவுக்கு கண்டனங்கள் எழுந்தன. கண்டித்தவர்களில் பலரும், “இளையராஜாவுக்கு பாஜக அரசிடமிருந்து என்ன நெருக்கடியோ… இப்படிப் பாராட்டியிருக்கிறார்” என்றும் கருத்து வெளியிட்டனர்.

அவர்களின் கணிப்பைப் போலவே, இளையராஜாவுக்கு ஒன்றிய அரசிடமிருந்து கடுமையான நெருக்கடி ஒன்று கடந்த சில மாதங்களில் ஏற்பட்டிருக்கிறது.
இதுகுறித்து ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி அதிகாரிகள் வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல், மோடி பற்றிய இளையராஜாவின் மிகப் பெரிய புகழ்ச்சிக்கு பின்னணி இதுவாக இருக்குமோ என்ற யூகத்தை ஏற்படுத்துகிறது.

அப்படி என்ன பின்னணி?
பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி புலனாய்வுத்துறை தலைமை இயக்குனரின் சென்னை மண்டல அலுவலகம் கிரீம்ஸ் ரோட்டில் இயங்கி வருகிறது.
இந்த அலுவலகத்திலிருந்து சீனியர் இன்டலிஜன்ஸ் ஆபீசர், பிப்ரவரி 28ஆம் தேதி இசையமைப்பாளர் இளையராஜாவின் எண் 38, முருகேசன் தெரு, தி நகர், சென்னை என்ற முகவரிக்கு இளையராஜாவின் பெயரைக் குறிப்பிட்டு ஒரு சம்மன் அனுப்பியிருக்கிறார்.

அந்த சம்மன் கடிதத்தில், ” நீங்கள் (இளையராஜா) உங்களுடைய சேவை வரியை கட்டாத காரணத்தால், சேவை வரி ஏய்ப்பு தடுப்புச் சட்டத்தின்படி எங்களது சென்னை மண்டல அலுவலகத்தில் நீங்கள் விசாரணைக்காக 2022 மார்ச் 10ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும். உங்களிடம் இருக்கும் ஆதாரங்களையும் ஆவணங்களையும் நீங்கள் வரும்போது எடுத்து வர வேண்டும்.

சென்ட்ரல் எக்சைஸ் சட்டம் 1944 பிரிவு 14, பைனான்ஸ் ஆக்ட் 1994 பிரிவு 83, ஜிஎஸ்டி சட்டம் 2017 பிரிவுகள் 70, 174 ( 2) ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் நீங்கள் மார்ச் 10ஆம் தேதி காலை 11 மணிக்கு உங்களது ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்” என்று இளையராஜாவுக்கு ஜிஎஸ்டி புலனாய்வுத்துறை தலைமை இயக்குனர் சென்னை மண்டல அலுவலகத்தில் இருந்து சம்மன் சென்றிருக்கிறது.

இந்த சம்மன்படி கடந்த மார்ச் 10ஆம் தேதி இளையராஜா ஜிஎஸ்டி புலனாய்வு துறை தலைமை இயக்குனர் மண்டல அலுவலகத்தில் ஆஜரானாரா என்ற சந்தேகம் எழுகிறது.
ஏனென்றால் இதே ஜிஎஸ்டி புலனாய்வுத் துறையில் இருந்து மார்ச் 21ஆம் தேதி மீண்டும் இளையராஜாவுக்கு ஒரு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதே காரணங்களை மீண்டும் குறிப்பிட்டு மார்ச் 28 ஆம் தேதி காலை 11 மணிக்கு ஜிஎஸ்டி புலனாய்வு துறை தலைமை இயக்குனர் சென்னை மண்டல அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று இளையராஜாவுக்கு இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது.

இந்த மார்ச் 28ஆம் தேதிக்குப் பிறகுதான் ஏப்ரல் 14ஆம் தேதி பிரதமர் மோடியை பற்றி தொடர்ந்து புத்தகங்கள் வெளியிட்டு வரும் ப்ளூ கிராஃப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன் நிறுவனத்தின், அம்பேத்கர் அண்ட் மோடி என்ற புத்தகத்திற்கு இளையராஜா முன்னுரை எழுதியிருக்கிறார்.

ஜிஎஸ்டி புலனாய்வுத்துறை இளையராஜாவுக்கு அனுப்பிய இரண்டு சம்மன்களுக்கும், இளையராஜா மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு எழுதிய முன்னுரைக்கும் தொடர்பு ஏதும் உண்டா என்று நம்மை நாமே குழப்பிக் கொள்ளத் தேவையில்லை.

நன்றி: மின்னம்பலம்.
– பாரூக்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp