அடக்கம் செய்ய ஆளில்லாமல் இறந்துகிடந்த இந்து இளைஞரின் உடலை இஸ்லாமியர்கள் தூக்கிச்சென்று, இந்து முறைப்படியே அடக்கம் செய்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் கள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் வேலு. இவருக்கு குப்பு என்ற மனைவி, மூன்று மகன்கள் இருந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேலுவும், அவரின் ஒரு மகனும் இறந்துவிட்டனர். வீடு வாசல் இல்லாததால், அவரின் மனைவி குப்பு, மற்ற இரண்டு மகன்கள் தினேஷ், சுதாகர் ஆகியோருடன் சாலையோரத்தில் தங்கியிருந்து, பழைய பிளாஸ்டிக் பொருள்களைச் சேகரித்து, பிழைப்பு நடத்திவந்தார். இந்த நிலையில், 30 வயதாகும் மகன் தினேஷுக்கு கடந்த வாரம் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்து, அருகிலிருந்து பார்த்துக்கொண்டார் தாய் குப்பு. தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தினேஷ் நேற்று பரிதாபமாக மரணமடைந்தார்.
அதையடுத்து, `என் மகன் தினேஷின் உடலை அடக்கம் செய்ய என்னிடம் பணம் இல்லை… யாரிடம் உதவி கேட்பது என்றும் தெரியவில்லை’ என அழுது புலம்பினார் தாய் குப்பு. இது குறித்துத் தகவலறிந்ததும், `மஜித்தே சேவை’ என்ற இஸ்லாமிய தொண்டு அமைப்பைச் சேர்ந்தவர்கள் தினேஷின் உடலை அடக்கம் செய்ய முன்வந்தனர்.
இந்த அமைப்பிலிருந்து வந்த ஆறு பேருமே இஸ்லாமியர்கள். அவர்கள் ஒன்று சேர்ந்து, தினேஷின் உடலை வாகனம் மூலம் சுடுகாட்டுக்குக் கொண்டுசென்று, இந்து முறைப்படி அடக்கம் செய்தனர். இந்த நிகழ்வு சமத்துவம், சகோதரத்துவத்தை எடுத்துரைப்பதால், பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
– பாரூக்.