சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், எஸ்.புதூர் அருகே உள்ள கே.நெடுவயல் ஊராட்சியில் சைல்டு லைன் 1098 சார்பில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து திறந்த வெளி கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
நிகழ்விற்கு ஊராட்சி மன்றத்தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் பாலியில் தாக்குதல்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது குறித்து உலகம்பட்டி காவல் நிலைய காவல் ஆய்வாளர் கலாராணியும், குழந்தை திருமணங்களை தடுப்பது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சாந்தியும் உரை நிகழ்த்தினர்.
மேலும், சைல்டு லைன் செயல்பாடுகள் குறித்து சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தபாபு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சைல்டு லைன் ஆற்றுப்படுத்துனர் ஜூலியட் வனிதா, குழந்தை தொழிலாளர் உருவாகாமல் தடுப்பது குறித்து சைல்டு லைன் உறுப்பினர் ரசீந்திரகுமார், இடைநிற்றல் இல்லாமல் அனைத்துகுழந்தைகளும் பள்ளிக்கு செல்வதின் அவசியம் குறித்து சைல்டு லைன் உறுப்பினர் கார்த்திகேயன் ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்.
அதன்பின்பு, கே.நெடுவயல் ஊராட்சியை குழந்தைத் திருமணம் இல்லாத, குழந்தைத் தொழிலாளர் முறை இல்லாத, பாலியல் தாக்குதல் இல்லாத, பள்ளியில் இடைநிற்றல் இல்லாத ஊராட்சியாக மாற்றுவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. பொதுமக்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.