தொடர் பணியால் காவல்துறையினர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவது, உடல் நிலை பாதித்து இறப்பு, தற்கொலை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் பல தரப்பிலும் காவலர்களுக்கு விடுப்பு அளிக்கும்படி அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
தமிழ்நாடு காவல்துறையில் காவலர்கள் எவ்வித ஓய்வும் இன்றி தொடர்ந்து பணிபுரிவதால் மனதளவில் சோர்வடைவதாகவும், இதனால் அவர்கள் உடல் நலனும் பாதிப்படைந்து அவர்கள் பணித்திறன் பாதிக்கும் ஆபத்து இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு சட்டசபையில் கடந்த ஆண்டு நவம்பரில், காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கிடும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.
குடும்பத்தில் உள்ளவா்களை மருத்துவமனை அழைத்து செல்ல, தனக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் ஓய்வு எடுத்துக் கொள்ள காவலர்களுக்கு இந்த வார விடுமுறை மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.
முதலமைச்சர் அறிவித்தன் பேரில் தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு தற்போது வார விடுப்புக்கு அனுமதியளித்திருந்தாலும் பெரும்பாலான மாவட்டங்களில் அந்தந்தக் காவல்நிலைய உயரதிகாரிகள், காவலர்களுக்கு விடுப்பு வழங்குவதில்லை.
இந்த நிலை திருப்பத்தூர் உட்கோட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் போக்குவரத்துக் காவலர்களுக்கு வார விடுப்பு வழங்குவதில் உயர் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக, அவர்களிடையே குமுறல் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வார விடுப்பு வழங்குவதில் பாகுபாடு காட்டப்படுவது காவலர்கள் கடும் மனஉளைச்சலை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
காவலர்களின் இந்தக் குறையைப் போக்க, உயரதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் காவலர்கள் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார்கள்.
– பாரூக், சிவகங்கை.