கோவை விமான நிலையத்தின் புதிய நுழைவாயில் பாதைக்காக மரங்களை வெட்ட முடிவுக்கு கடும் எதிர்ப்பு!!

ரோடு விரிவாக்கப் பணிகளுக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக வளர்க்கப்பட்ட, 5,000 மரங்களை, கோவை விமான நிலையத்தின் புதிய நுழைவாயில் பாதைக்காக வெட்ட முடிவு செய்திருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த, 20 ஆண்டுகளில் கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு தேசிய, மாநில நெடுஞ்சாலைகளும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

அவிநாசி ரோடு, திருச்சி ரோடு, தடாகம் ரோடு, பொள்ளாச்சி ரோடு விரிவாக்கப் பணிகளுக்காக பல ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.வளர்ச்சிப் பணிக்காக மரங்கள் வெட்டப்பட்டால், மாற்று மரங்களை வைக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த, 2010லிருந்து, 2012 வரையிலான இரு ஆண்டுகளில், என்.எச்., 67 ரோட்டில், 898 மரங்களும், என்.எச்., 209 ரோட்டில், 53 மரங்களும் வெட்டி அகற்றப்பட்டன.இந்த மரங்களை ஏலம் விட்டதால், தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு, 37 லட்சத்து, 21 ஆயிரத்து, 950 ரூபாய் வருவாய் கிடைத்தது. ஆனால், வெட்டப்பட்ட, 951 மரங்களுக்கு ஈடாக ஒரு மரத்தைக்கூட வளர்க்காமல், ஐகோர்ட் உத்தரவை உதாசினப்படுத்தியது.இதுதொடர்பான தகவல்களை, கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் வாங்கினார். திரட்டிய ஆதாரங்களை வைத்து, தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு எதிராக அவர் வழக்கு தாக்கல் செய்தார்.

அந்த வழக்கில் ஆஜரான தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக, 10 ஆயிரம் மரங்களை நட்டு வளர்ப்பதாக உறுதியளித்தனர்.வழக்கில், 2016 ஆக., 8ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில், கோவை-சத்தி ரோட்டில், சரவணம்பட்டி அருகே சித்ரா நகரில் இரண்டு ஏக்கரில், 500 மரங்களும், அவிநாசி ரோட்டில் லீ மெரிடியன் ஓட்டல் முன்புள்ள, 10 ஏக்கரில் 5,000 மரங்களும் நட்டு வளர்ப்பதாக, புகைப்படத்துடன் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். கோர்ட்டில் உறுதியளித்தபடி, 10 ஆயிரம் மரங்களைக் கூட, அவர்கள் நட்டு வளர்க்கவில்லை. ஆனால், 5500 மரங்களை நன்றாக வளர்க்கிறார்கள் என்ற நம்பிக்கையில், மனுதாரரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

அவிநாசி ரோட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை இடத்திலுள்ள, 5,000 மரங்களும் நன்கு வளர்ந்து, ஆக்சிஜன் தொழிற்சாலையாக மாறியுள்ளன. இந்நிலையில், கோவை விமான நிலைய விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, புதிய நுழைவாயிலுக்கான பாதை அமைப்பதற்கு, இந்த, 5,000 மரங்கள் வெட்டப்படவுள்ளதாக தகவல் பரவியுள்ளது. இதற்கு சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டால், ‘ஆம், இல்லை’ என்ற முரண்பாடான தகவல்களைத் தெரிவிக்கின்றனர்.மனுதாரர் ஈஸ்வரன் கூறுகையில், ”பத்தாண்டுகளுக்கு முன்பு வளர்ச்சிப் பணிகளுக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக, ஐகோர்ட் உத்தரவின்படி வளர்க்கப்பட்ட மரங்களை, மற்றொரு வளர்ச்சிப் பணிக்காக வெட்டுவது எந்த வகையிலும் நியாயமில்லை. இதை நாங்கள் சட்டரீதியாக எதிர்ப்போம். மரங்களை அழித்து மாற்றுப்பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்,” என்றார்.மாநகர வளர்ச்சி முக்கியம்தான்; மக்களுக்கு மூச்சுக்காற்றை வழங்கும் மரங்கள் அதை விட முக்கியம்!-

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp