சிவகங்கை மாவட்டம், கீழசாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியாம்பிள்ளை மகன் மூக்கன்(38).
இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து விட்டு தற்போது விடுமுறையில் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இவர் சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலை கிராமத்தில் நடைபெறும் திருவிழாவிற்காக தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார்.
திருவிழா நிகழ்வுகள் முடிந்தபின்பு மூக்கன், ஜெயபிரகாஷ்(25) என்பவருடன் சேர்ந்து பிரான்மலையில் உள்ள வேளார் ஊரணியில் நேற்று மாலை குளிக்கச் சென்றுள்ளார்.
குளிக்கத் துவங்கி சிறிது நேரத்திற்குப் பின்பு, மூக்கன் ஊரணியின் உள்பகுதிக்குச் சென்று மூழ்கி விட்டதாகத் தெரிகிறது, உடனடியாகக் கரையேறிய ஜெயபிரகாஷ், ஊர் பெரியவர்களுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து, தீயணைப்பு துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தேடுதல் பணி மாலை சுமார் 6மணிக்கு தொடங்கியது. இரவு மணி பத்து அளவில் சிவகங்கையில் இருந்து தீயணைப்புத் துறையின் மூலம் படகுகள் வரவழைக்கப்பட்டு அதிகாலை 3மணி வரை மீட்புப்பணி நடைபெற்றது.
அதன்பின்பு, இன்று காலை 7 மணிக்கு மூக்கனை மீட்கும் பணி தொடங்கியது.
காலை 8:30 மணிக்கு மூக்கன் சடலமாக ஊரணியிலிருந்து மீட்கப்பட்டார்.
அவரது சடலத்தைக் கைப்பற்றிய எஸ்வி.மங்கலம் காவல்துறையினர், சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
மீட்பு பணியின்போது தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர், சிவகங்கை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலர் சத்திய கீர்த்தி, சிங்கம்புணரி வட்டாட்சியர் கயல் செல்வி, வருவாய் ஆய்வாளர் ராஜாமுகமது, கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.
– பாரூக், சிவகங்கை.