சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டி ஊராட்சி சாத்தினிப்பட்டியை சேர்ந்த சகோதரர்கள் ராமச்சந்திரன் – மாணிக்கம் (வயது 60). ராமச்சந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டார்.
மாணிக்கத்திற்கு பஞ்சு (50) என்ற மனைவியும், ஜெயா (25) உள்பட 3 மகள்களும் உள்ளனர்.
மாணிக்கத்திற்கு, அவரது சகோதரர் ராமச்சந்திரனின் மகன் மணி (40) என்பவருக்கும் சொத்து பாகம் பிரிப்பதில் ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.
நேற்று இரவும், இன்று காலையும் சொத்து பிரிப்பது சம்பந்தமாக உறவினர்களை வைத்து அவர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அப்போது மாணிக்கம், சொத்தை ஏற்கனவே பிரித்து விட்டதாகவும், இப்போது புதிதாக ஏன் சொத்து கேட்கிறாய் என்றும் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மணி, அவரது வீட்டுக்குச் சென்று அரிவாளை எடுத்து வந்து மாணிக்கம், அவரது மனைவி பஞ்சு, மகள் ஜெயா ஆகியோரை சரமாரியாகத் தாக்கி, கொடூரமாக வெட்டத் துவங்கினார்.
அவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவருவதைப் பார்த்த மணி, அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. பலத்த காயமுற்று இரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக்கொண்டிருந்த மாணிக்கம், பஞ்சு, ஜெயா ஆகியோரை சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்கள். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தாறுமாறாக வெட்டப்பட்ட மாணிக்கம் உட்பட மூவரையும் கவலைக்கிடமான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இவர்களில் மாணிக்கத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
பாகப்பிரிவினை பிரச்சனையால் பங்காளி குடும்பத்தை வெட்டிக் கொலை செய்ய முயன்ற மணியை, காவல்துறையினர் இன்று மதியம் திருப்பத்தூரில் வைத்து கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.