சிங்கம்புணரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 69ஆவது பிறந்த நாளையொட்டி, சனி மற்றும் ஞாயிறு என 2 நாட்கள் நடைபெறும் பெண்கள் மின்னொளி கபாடி போட்டி நேற்று துவங்கியது.
நிகழ்ச்சிக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் முன்னாள் அமைச்சர் தென்னவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, போட்டியில் கலந்துகொள்ளும் வீராங்கனைகள் அனைவரும் சிங்கம்புணரி அண்ணா மன்றத்திலிருந்து சேவுகப்பெருமாள் கோவில் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த போட்டித்திடல் வரை ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
பார்வையாளர்கள் போட்டிகளை ரசிக்க பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
13 அணிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டியை இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. 21 போட்டிகள் நடத்தத் திட்டமிடப்பட்டு அவை, லீக் மற்றும் நாக்அவுட் முறையில் நடைபெற உள்ளதாக போட்டி நடுவர்கள் தெரிவித்தனர்.
வெற்றிபெற இருக்கும் அணிகளுக்கு முதல் பரிசாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கும் ஒரு லட்சத்து 69 ரூபாயும், இரண்டாம் பரிசாக சிங்கம்புணரி பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து வழங்கும் 75 ஆயிரத்தி 69 ரூபாயும், மூன்றாம் பரிசாக சிங்கம்புணரி நகர திமுக அவைத்தலைவரும், தொழிலதிபருமான சிவகுமார் வழங்கும் 50 ஆயிரத்து 69 ரூபாயும், நான்காம் பரிசாக சிங்கம்புணரி பேரூராட்சி துணைத்தலைவர் இந்தியன் செந்தில் வழங்கும் 25 ஆயிரத்து 69 ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பெண்கள் மின்னொளி கபாடிப் போட்டி, விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியை சிங்கம்புணரி ஒன்றிய – நகர திமுக மற்றும் அதன் இளைஞரணி சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.