டெல்லி ஜஹாங்கிர்புரியில் வீடுகளை இடிக்க இடைக்கால தடை உச்சநீதிமன்றம் பிறப்பித்த பிறகும், தொடர்ந்து வீடு, கடைகளை இடித்த சட்டவிரோதச் செயலை தடுத்து நிறுத்தினார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர், பிருந்தா காரத்.
டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரியில் கடந்த 16ஆம் தேதி அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதன் பிறகு இந்து அமைப்புகள் சார்பில் அப்பகுதியில் ஊர்வலம் நடைபெற்றது. அங்குள்ள மசூதி அருகே ஊர்வலம் வந்த போது, இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கற்கள், இரும்புக் கம்பிகள் உள்ளிட்டவற்றை கொண்டு அவர்கள் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். ஒருசிலர் துப்பாக்கியாலும் எதிர் தரப்பினரை நோக்கி சுட்டனர். இந்தக் கலவரத்தில் 8 போலீஸார் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 30 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதனிடையே, கலவரம் நிகழ்ந்த பகுதியான ஜஹாங்கிர்புரியில் ஏராளமான ஆக்கிரமிப்பு வீடுகளும், கடைகளும் இருப்பதாக மாநகராட்சி மேயருக்கு டெல்லி பாஜக தலைவர் அதேஷ் குப்தா கடிதம் அளித்தார்.
அதைத்தொடர்ந்து நேற்று காலை 1250 CRPF வீரர்கள், மக்களின் பாதுகாப்பு என்ற பெயரில், ஜஹாங்கிர்புரியை சுற்றி வளைத்து நின்றனர்.
அதன் தொடர்ச்சியாக எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல், ஜஹாங்கிர்புரி பள்ளி வாசல் அருகில் இருந்த வீடுகளையும், கடைகளையும் புல்டோசர்களின் பெரும் கைகள் இழுத்துப் போட்டுத் தகர்த்து எறிந்தன. ஜஹாங்கிர்புரி மக்கள் கையறு நிலையில் அங்கும் இங்கும் ஓடினார்கள்.
இந்நிலையில், இந்த சட்டவிரோத இடிப்பு நடவடிக்கையை நிறுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்குப் பிறகும், உச்சநீதிமன்றம் உத்தரவு எங்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறிக் கொண்டு, அதிகாரிகள் மேலும் இரண்டு மணிநேரம் வீடுகள், கடைகளை இடித்துத் தள்ளினர்.
உடனடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்.பிருந்தா காரத், CPIML லிபரேஷன் கட்சி மாநிலச் செயலாளர் தோழர்.ரவி ராய் உட்பட சில தோழர்களும், ஜஹாங்கிர்புரிக்கு விரைந்து சென்றனர், புல்டோசர்களின் முன்னே வழி மறித்து நின்றனர்.
“நிறுத்துங்கள்; உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துங்கள்;
அதற்காகவே நான் இங்கே வந்திருக்கிறேன்; உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு நகல் என்னிடம் இருக்கிறது” என்று உரக்கக் குரல் எழுப்பினார் தோழர்.பிருந்தா காரத்.
அங்கிருந்த தேபேந்திர பதக் என்ற உயர் காவல்துறை அதிகாரியைச் சந்தித்து உச்ச நீதிமன்றத் தடை உத்தரவை அவரிடம் காட்டியதன் பின்பே ஜஹாங்கிர்புரியில் வீடுகள், கடைகளை இடிப்பதை புல்டோசர்கள் நிறுத்திக் கொண்டன!
உண்மையிலேயே சட்டத்திற்குப் புறம்பாக ஆக்கிரமிப்பு செய்தவர்களாக இருந்தால் கூட, சட்டப்படி அறிவிப்பு கொடுத்து, சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்டு, அதன் பின்னர்தான் ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை செய்ய வேண்டும் என்றுதான் சட்டம் சொல்கிறது.
இந்தியாவில் நடைமுறையில் உள்ள எந்தச் சட்டத்திலும் குற்றஞ்சாட்டப்பட்டவரின் வீட்டை இடிக்க வேண்டும் என்று எந்த விதியும் கிடையாது. ஆனால் கடந்த சில நாட்களாக உத்திரப்பிரதேசம், மத்தியபிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் இதே போன்று சிறுபான்மையினரின் வீடு மற்றும் வியாபார நிறுவனங்கள், அந்தந்த மாநில அரசுகளால் சட்டவிரோதமாக தகர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
– பாரூக்.