கோவை: தங்கையை பாலியல் வன்கொடுமை செய்ததாக கணவர் மீது பொய் புகார் அளித்த மனைவிக்கு அபராதம் விதித்து கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை பொள்ளாச்சி நல்லூத்துக்குளி அரிஜன காலனியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி ரோகிணி. இவரது 16 வயது தங்கையை 2019 ஆகஸ்ட் 20-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது மிரட்டி, பாண்டியன் பாலியல் வன்கொடுமை செய்ததாக ரோகிணி பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதேபோல, 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம், 2019 மார்ச் மாதம் என இரண்டு முறை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதுகுறித்து கேட்டபோது தனது தங்கையை வேறு யாருக்கேனும் திருமணம் செய்துவைத்தால், அவரைக் கொன்றுவிடுவேன் என தெரிவித்ததாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு (போக்சோ) சட்டத்தின்கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.குலேசேகரன் இன்று (ஏப்.6) தீர்ப்பளித்தார். அதில், கணவரை மிரட்டுவதற்காக அவர் மீது பொய் புகார் அளித்த ரோகிணிக்கு போக்சோ சட்டப்பிரிவு 22-ன்கீழ் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து, பாண்டியனை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
-சுரேந்தர்.