சுட்டெரிக்கும் வெயில் காரணமாக தடாகம் வனப்பகுதியில் இருந்து தாகம் தணிக்க காட்டுயானைகள் வெளியேறி வருகின்றன.
இதனால் வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குளிர்பானங்கள், குளிர்ச்சி தரக்கூடிய பழங்களை வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள். இந்த சுட்டெரிக்கும் வெயில் காரணமாக கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வனப்பகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன.
இதனால் மரம், செடிகள் காய்ந்து காணப்படுகின்றது
மழை இல்லாததால் வனப்பகுதிகளில் ஓடும் சிற்றோடைகள், நீர்வீழ்ச்சிகளும் தண்ணீர் இன்றி காட்சி தருகின்றன.
இதனால் உணவு, தண்ணீர் தேடி காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளது.
கோவை மாவட்டம், தடாகம் பள்ளத்தாக்கில் உள்ள வனப்பகுதிகளில் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் ஊருக்குள் படையெடுத்து வரும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
24 வீரபாண்டி ஊராட்சிக்கு உட்பட்ட மருதம் கரைக்கீழ் பதி என்ற கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தொட்டி ஒன்றில் தண்ணீர் தேடி வனப் பகுதியில் இருந்து குட்டிகளுடன் வந்த யானை கூட்டம் தண்ணீர் குடித்து பின்னர், நீண்ட நேரத்திற்கு பிறகு ஆடி, அசைந்தபடி வனப்பகுதிக்குள் சென்றன. காட்டு யானைகள் ஊருக்குள் வந்து தண்ணீர் குடித்த காட்சிகளை அப்பகுதி மக்கள் பார்த்துஅச்சமடைவதாக தெரிவித்தனர்
கோடை காலம் தொடங்கிவிட்டதால் வனப்பகுதியில் போதிய உணவு, தண்ணீர் கிடைக்காமல் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதாகவும், இதை தடுக்க வனப்பகுதிகளில் விலங்குகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில், நீர் நிரப்ப வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கிராம மக்களும், வன உயிரின ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் கோடை காலத்தை கருத்தில் கொண்டு வனவிலங்குகளுக்கு தண்ணீர் தாகத்தை தீர்க்க குட்டைகளை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது!!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.