சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே விராமதி கிராமத்தில் உள்ள பேய்கண்மாயில் தற்போது தண்ணீர் வற்ற தொடங்கியுள்ள நிலையில் கண்மாய் பராமரிப்பு மற்றும் கிராம பொது தேவைக்கு நிதி திரட்டும் வகையில் இன்று மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது.
இதற்காக விராமதி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களான கீழச்சீவல்பட்டி, அழகாபுரி, நெல்லூர் குளத்துப்பட்டி, திருமயம் உள்ளிட்ட ஏராளமான பகுதியிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இன்று அதிகாலை 5 மணி முதல் அந்த கண்மாய்க்கு வந்து “ஊத்தா” என்றழைக்கப்படும் மீன்பிடி கூடையுன் காத்திருந்தனர். அதன்பின்னர் ஊர் முக்கியஸ்தர்கள் கொடிசைத்தவுடன் கூடைகளுடன் காத்திருந்த கிராம மக்கள் வேகமாக ஓடி சென்று கண்மாயில் இறங்கி போட்டி போட்டுக்கொண்டு மீன்களை பிடிக்க தொடங்கினர்.
இவ்வாறு மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கட்லா, விரா, பொட்லா, ஜிலேப்பி ,கெழுத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் கிடைத்தது. மீன்பிடி விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் குறைந்தது 2 கிலோவிற்கும் மேல் மீன்கள் கிடைத்ததால் அந்த பகுதி முழுவதும் இன்று மீன்வாசனை கமகமத்தது. மேலும் இந்த மீன்பிடி திருவிழாவை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்த ஏராளமானோர் கண்மாய் கரை சாலைகளில் அமர்ந்து வேடிக்கை பார்த்தனர். இந்த நிகழ்விற்கு அரசுத்துறைகளிடம் இருந்து முறையான அனுமதி பெறப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
– ராயல் ஹமீது.