பொள்ளாச்சி அருகே திறந்தவெளியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ராமபட்டிணத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ராமபட்டிணம், தாளக்கரை, கோபாலபுரம், மண்ணூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஆனால் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பஞ்சு, மருந்து பாட்டில், ஊசிகளை சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள பழைய கட்டிடத்தின் அருகில் கொட்டுகின்றனர். பஞ்சுகள் காற்றில் பறந்து அங்குமிங்குமாக கிடக்கிறது. இதை அதிகாரிகளும் கண்டுகொள்ளாததால் தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். இந்த நிலையில் நோயாளிகளுக்கு ஊசி போடுவதற்கும், ரத்த பரிசோதனை செய்தவற்கும் மற்றும் காயங்களை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் பஞ்சுகளை திறந்தவெளியில் கொட்டுகின்றனர். மேலும் அவற்றுடன் ஊசிகள், காலி மருந்து பாட்டில்களும் கிடக்கின்றன.
ரத்த கறைகளுடன் கிடக்கும் பஞ்சுகள் காற்றில் பறக்கின்றன. இந்த பஞ்சுகளில் உள்ள கிருமிகள் மூலம் மற்றவர்களுக்கு நோய் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. தற்போது தான் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இதுபோன்று மருத்துவ கழிவுகளை திறந்தவெளியில் கொட்டுவதால் தொற்று நோய் பரவ கூடும். மேலும் மருத்துவ கழிவுகளை கொட்டி தீயிட்டு எறிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே மருத்துவ கழிவுகளை முறையாக சேகரித்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவைமாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.