வால்பாறை நகரில், திறந்தவெளியில் கொட்டப்படும் குப்பை கழிவால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் வால்பாறை நகரில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வீடு மற்றும் கடைகளில் வெளியாகும் குப்பை, ஸ்டேன்மோர் சந்திப்பில் உள்ள திறந்தவெளி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. திடக்கழிவு மேலாண் மை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், குப்பைக்கழிவால் நகரில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
குப்பை உடனுக்குடன் அகற்றப்படாமல் இருப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதோடு, நோய் பரவும் அபாயம் உள்ளது.
நகர் பகுதி மக்கள் கூறியதாவது: வால்பாறை நகராட்சியில், நாள் தோறும் வெளியாகும் குப்பைக்கழிவை ஸ்டேன்மோர் ரோட்டில் திறந்தவெளியில் கொட்டுவதால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக, திடக்கழிவு மேலண்மை திட்டம் என்ற பெயரில், பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தும், பணி ஆமை வேகத்தில் நடக்கிறது.இதனிடையே, வீடு மற்றும் கடைகளில் வெளியாகும் குப்பைக்கழிவு, இறைச்சிக்கழிவு சாலையோரம் கொட்டப் படுவதால்,அதன் அருகில் வசிக்கும் மக்கள் துர்நாற்றத்தால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, வால்பாறை நகராட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணியை விரைந்து துவங்க வேண்டும். மேலும், குப்பையை நகரில் கொட்டாமல், எஸ்டேட் பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தை தேர்வு செய்து, அந்த இடத்தில் குப்பையை கொட்டினால் தான், வால்பாறை நகரை சுகாதாரமான நகராட்சியாக மாற்ற முடியும். இவ்வாறு, கூறினர்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவைமாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.