நெல்லையில் நேற்று மாலை கனமழை கொட்டித்தீர்த்தது. 1 மணி நேரம் இடைவிடாது பெய்த இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கடந்த 3 நாட்களாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நெல்லையில் நேற்று காலை வெயில் அடித்தது. மாலை 4 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 4.50 மணியளவில் மழை பெய்யத்தொடங்கியது. தொடர்ந்து இடி, மின்னலுடன் 1 மணிநேரத்திற்கு மேல் கனமழை கொட்டித்தீர்த்தது. வெளுத்து வாங்கிய மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதி மற்றும் சில பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்வதுபோல் சென்றன. பாளையங்கோட்டையில் மழையின்போது மரம் விழுந்தது. பல இடங்களில் மின் இணைப்பு துண்டித்தது.
இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மழை காரணமாக தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு ரோட்டோரம் உள்ள கட்டிடங்களில் மழைக்கு ஒதுங்கி நின்றனர். பள்ளி, கல்லூரிகள் முடிந்து வந்த மாணவ, மாணவிகள், அலுவலகம் சென்று திரும்பிய ஊழியர்கள், தொழிலாளர்கள் போன்றோர் வீடுகளுக்கு உடனே திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர். சிலர் குடை பிடித்தபடியும், மழையில் நனைந்தபடியும் சென்றதை காணமுடிந்தது.
நாளைய வரலாறு செய்தியாளர்
-அன்சாரி நெல்லை.