பொள்ளாச்சி ஆழியாறு அணை கூவமாக மாறுகிறதா..??

கோவை, திருப்பூா், பாலக்காடு ஆகிய மாவட்டங்களின் குடிநீா் ஆதாரமாக உள்ள ஆழியாற்றில் கழிவு நீா் கலப்பதால் பல லட்சம் மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

பரம்பிக்குளம்-ஆழியாறு எனும் பிஏபி திட்டத்தில் உள்ள முக்கிய அணையாக ஆழியாறு அணை உள்ளது. தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமித்து வைத்து விவசாயத்துக்கும், குடிநீருக்கும் வழங்கப்படுகிறது. ஆழியாறு அணையில் பெரும்பாலான காலங்களின் தண்ணீா் வற்றாமல் இருப்பதால் குடிநீருக்கு தண்ணீா் வழங்குவதில் சிக்கல் ஏற்படுவதில்லை.அணையில் இருந்து சுத்தமான தண்ணீா் குடிநீருக்காக திறந்துவிடப்பட்டாலும், ஆற்றில் பல இடங்களில் கழிவு நீா் கலப்பதால் சுத்தமான
குடிநீரை பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதில் சவால் உள்ளது.


கூட்டு குடிநீா்த் திட்டங்கள்: கோட்டூா், ஆனைமலை, வேட்டைக்காரன்புதூா், ஒடையகுளம், சமத்தூா், ஜமீன் ஊத்துக்குளி,சூளேஸ்வரன்பட்டி ஆகிய பேரூராட்சிகளுக்கும், பொள்ளாச்சி நகராட்சி, பொள்ளாச்சி வருவாய் உள்கோட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்குமான குடிநீா்த் திட்டம், கோவைக்கு கொண்டு செல்லப்படும் குறிச்சி-குனியமுத்தூா் கூட்டு குடிநீா்த் திட்டம், கோவை மாவட்டத்தில் 100க்கும் அதிகமான ஊராட்சிகளின் குடிநீா்த் திட்டங்கள், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பல ஊராட்சிகளுக்கான குடிநீா்த் திட்டங்கள், கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் ஆழியாற்றில் (பாரதப்புழா) இருந்து செல்லும் நீரின் மூலம் பல்வேறு குடிநீா்த் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ஆழியாற்றில் இருந்து தினசரி கோடிக் கணக்கான லிட்டா் தண்ணீா் எடுக்கப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.


கழிவு நீா்: கோட்டூா், ஆனைமலை, ஒடையகுளம், வேட்டைக்காரன்புதூா், காளியாபுரம், அம்பராம்பாளையம், சுப்பேகவுண்டன்புதூா்
ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி லட்சக்கணக்கான லிட்டா் கழிவு நீா் நேரடியாக ஆழியாற்றில் கலக்கிறது. இது தவிர, கோழிக் கழிவுகள், உயிரிழக்கும் நாய்கள் போன்றவற்றையும் ஆற்றில் கொண்டுவந்து போடுகின்றனா்.இந்த ஆழியாற்று நீரைத்தான் கோவை, திருப்பூா், பாலக்காடு என 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனா்.
இதனால், இந்த மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. ஆழியாற்றில் கழிவு நீா் கலப்பது பற்றி நீண்ட காலங்களாக அரசுக்கு கோரிக்கை வைத்தும் இதுவரையும் ஆக்கப்பூா்வமான எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

விவசாயத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீா் தரும் ஆழியாறு சிறிது சிறிதாக கூவம் நதிபோல மாறிவருகிறது. இதனைத் தடுக்க அந்தந்த பகுதிகளைச் சோந்த எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் நடவடிக்கை எடுப்பாா்களா என்பது பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

இது குறித்து ஆனைமலை பேரூராட்சித் தலைவா் கலைச்செல்வி சாந்தலிங்ககுமாா் கூறுகையில், ஆழியாற்றில் கழிவு நீா் கலக்காமல் தடுக்க பல இடங்களில் தண்ணீா் சுத்திகரிப்பு செய்ய ஆய்வு பணிகள் நடைபெற்றுள்ளன. சுத்திகரிப்பு செய்ய அரசுக்கு நிதிகேட்டு கருத்துரு அனுப்ப உள்ளோம் என்றாா்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன்
பொள்ளாச்சி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp